ரவுடிகளை அடக்குவதற்கு என்கவுண்டர் தீர்வாகாது என்றும் கூலிப்படைக்கும் காவல்துறைக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என்றும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் 25 ஆண்டுகளாக மின்சார வாரியத்தின் கடன் சுமையை குறைக்க எந்த அரசும் முயற்சி செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் தமிழகத்தில் திடீரென்று 72 ரவுடிகளை கைது செய்துள்ளனர், இவ்வளவு நாளாக இந்த ரவுடிகள் இருந்தது காவல்துறைக்கு தெரியாதா, கூலிப்படைகள் மூலம் நடைபெறும் கொலைகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும், ஆனால் அதே நேரத்தில் என்கவுண்டர் அதற்கு தீர்வல்ல, அப்படி செய்தால் கூலிப்படைக்கும் காவல்துறைக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும், குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மோடி அரசில் புதிய சிந்தனை, மாற்று பாதை எதுவுமில்லை என்றும் அமைச்சரவையில் கூட பெரிய மாற்றம் இல்லை என்றும் மக்களை வஞ்சித்தது போலவே தொடர்ந்து இந்த ஆட்சியில் அஞ்சிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.