Publish Date: Fri, 12 Jul 2024 (10:40 IST)
Updated Date: Fri, 12 Jul 2024 (10:42 IST)
ரவுடி துரைசாமி போலீசார் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை முன் துரைசாமியின் உறவினர்கள் திடிரென சாலை மறியல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் துரைசாமி என்கவுண்டர் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோஷமிட்டு வருவதை அடுத்து 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் சாலை மறியல் செய்யும் ரவுடி துரைசாமி உறவினர்கள் துரைசாமியுடன் இருந்த பிரதீப்குமாரை ஒப்படைக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முன்னதாக திருச்சி எம்ஜிஆர் நகரில் துரை என்ற துரைசாமி என்ற ரவுடி மீது கொலை, கொள்ளை உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவரை கைது செய்ததற்காக திருச்சி போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால் அவர் தான் பதுங்கி இருந்த இடத்திலிருந்து ஆயுதங்களை கொண்டு போலீசாரை மிரட்டியதாகவும் அதுமட்டுமின்றி எஸ்ஐ மகாலிங்கம் என்பவரை ஆயுதத்தால் தாக்கியதாகவும் தெரிகிறது.
இதனை அடுத்து போலீசார் தற்காப்புக்காக ரவுடி துரையை நோக்கி சுட்ட நிலையில் துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடல் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தான் அவரது உறவினர்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் செய்து வருகின்றனர்.