உசிலம்பட்டி அருகே ஆண்கள் மட்டுமே வழிபாடு செய்யும் ஜக்கம்மாள் கோவிலில் தை மாத சிறப்பு வழிபாடு வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் பழமை வாய்ந்த ஜக்கம்மாள் கோவிலில் தை இரண்டாம் தேதியை முன்னிட்டு எருமார்பட்டி, ரெங்கசாமிபட்டி, பாறைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு ஜக்கம்மாள் வாழ்வதாக நம்பப்படும் பழமையான மரத்திற்கு பழம் தட்டுடன் வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இந்த திருவிழாவின் போது அந்த ஊர் மற்றும் அதன் பக்கத்து கிராமங்களில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகளை மேளதாளத்துடன் அழைத்து வந்து வழிபாடு செய்வார்கள். இந்த வழிபாட்டில் பெண்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள்.
ஆண்கள் மட்டும் பழத்துடன் வந்து கோயில் முன்பு வரிசையாக அமர்ந்து ஜக்கம்மாளுக்கு பூஜை முடியும் வரை காத்திருந்தனர். பின்னர் ஜக்கம்மாள் குடி கொண்டிருக்கும் வாகை மரத்திற்கு பக்தர்கள் கொண்டு வந்த புத்தாடைகள் மற்றும் மாலைகளை அணிவித்து ஜக்கம்மாளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது.
பின்னர் பூசாரிகள் பக்தர்கள் கொண்டு வந்த தேங்காய்களை உடைத்து ஜக்கம்மாளுக்கு அபிஷேகம் செய்தனர். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் ஐதீகமாக நம்பப்படுகிறது.