நாட்டைக் காக்க வந்தவர் மோடி என்று முதலில் கூறிய போது நான் கூட ஆரம்பத்தில் நம்பினேன் என்று தேர்தல் பிரச்சார மேடையில் கமல்ஹாசன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் அவர் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரகாஷ் என்பவருக்கு ஆதரவாக பேசியபோது நாட்டை காக்கும் உரிமை தமிழர்களுக்கு உள்ளது என்றும் தேசிய நீரோட்டத்தில் கலக்காத திராவிட கூட்டம் இது என்று சிலர் பேசிக் கொள்கிறார்கள். வடநாட்டில் யாராவது காமராஜர், சிதம்பரம் என்று பெயர் வைத்தார்களா? ஆனால் இங்கு காந்தி, நேரு ,சுபாஷ் சந்திரபோஸ் என்று தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள் என்று கமல்ஹாசன் கூறினார்
நாடு காக்க வந்துள்ளேன் என்று தொடக்கத்தில் மோடி சொன்னபோது நானே கூட நம்பி விட்டேன், கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்றார் மோடி, பின்னர் கருப்பு பணம் முதலைகளை பிடிப்பேன் என்று கூறினார். ஆனால் இப்போதுதான் தெரிகிறது அவர் எதுவுமே செய்யவில்லை என்று கமலஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார்
அரசியலில் மதம் கலந்ததால் ஐரோப்பிய கண்டம் சீரழிந்தது, அதனால் அவர்கள் சந்தித்த இழப்புகள் ஏராளம், அப்படி ஒரு நிலைமை இந்தியாவுக்கு வரக்கூடாது என்றும் கமல்ஹாசன் பேசினார்.