Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எப்படி இருக்கிறார் வைகோ.? வதந்திகளை நம்பாதீர்கள் - மகன் வேண்டுகோள்..!

Durai Vaiko

Senthil Velan

, செவ்வாய், 28 மே 2024 (14:38 IST)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உடல்நிலை குறித்த வதந்தைகளை நம்பாதீர்கள் என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
 
கடந்த சனிக்கிழமை இரவு நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள அவரது சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் வைகோ தங்கியிருந்தபோது தடுமாறி கீழே விழுந்ததாக தகவல் வெளியானது. 
 
இதில், அவரது வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ள நிலையில் வைகோவின் உடல்நிலை குறித்து பலவிதமான தகவல்கள்  பரவி வருகிறது.
 
இதுகுறித்து வைகோவின் மகனும், மதிமுகவின் முதன்மை செயலாளருமான துரை வைகோ விளக்கம் அளித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கால் தடுமாறி விழுந்ததில் இடது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

நாளை அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் சிறிய அறுவை சிகிச்சை தான் எனவும் யாரும் பயப்பட வேண்டியது இல்லை எனவும் துரை வைகோ தெரிவித்துள்ளார். தந்தையின் உடல்நிலை குறித்து சில விஷமிகள் தவறான செய்திகளை பரப்பி ஆதாயம் தேட அற்பத்தனமாக முயற்சிக்கிறார்கள் என்றும்  அவரது உடல்நிலை குறித்து வெளிவரும் எந்த செய்தியையும் புறந்தள்ளுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 
 
கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட தலைவரின் மீது அன்பு கொண்ட பலர் ஆர்வ மிகுதியிலும், கவலையிலும் தலைவரை நேரில் சந்திக்க வருகிறோம் என என்னிடம் தெரிவித்து வருகிறார்கள் என்றும் நம்முடைய வருகையால் மருத்துவமனை நிர்வாகத்திற்கும், பிற நோயாளிகளுக்கும் எந்தவித இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதால் யாரும் தலைவரை சந்திக்க வர வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 
விரைவில் பூரண நலம் பெற்று தலைவர் வைகோ இல்லம் திரும்புவார்,  அதன்பிறகு கட்சி தொண்டர்கள் அவரை சந்திக்கலாம். அதுவரை, நேரில் வருவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது என்று துரை வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை..!