22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசினுடைய வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 22 மாவட்டங்களில் பெருமழை மற்றும் அதனால் ஏற்படும் பேரிடர்களை சமாளிப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் மிக கனமழைக்கும் முன்னதாகவே தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்தையும் பேரிடர் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.