தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு இன்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வருவதாகவும், அடுத்த இரண்டு தினங்களில் இந்த காற்றழுத்த தாழ்வு மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரையை நோக்கி வரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று வட கடலோர மாவட்டங்களில் மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்யவும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளையும் வடகடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்றும், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 20-ஆம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran