தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட மோகத்தால் பலர் பணத்தை இழப்பதுடன் தற்கொலையும் செய்து கொள்வதால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
இதுகுறித்து சிறப்பு விசாரணை குழுவை அமைத்த தமிழக அரசு அதன் அறிக்கையை கொண்டு சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை அமல்படுத்தியது. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விரைவில் இந்த சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு 3 மாதம் சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், சூதாட்ட நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.