தென் இந்திய பகுதிகளில் நாளை முதல் பருவமழை தொடங்க உள்ள நிலையில் நாளை 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு அதிகமான மழைப்பொழிவு வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படுகிறது. தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. நாளை தொடங்கும் கனமழை படிப்படியாக உயர்ந்து நவம்பர் 4ம் தேதி வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் நாளை தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, விருதுநகர், கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.