பொங்கல் நெருங்கி வரும் நிலையில் கலப்பட வெல்லம் தயாரிக்கப்படுவதாக எழுந்த புகாரில் 2500 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் வைக்க வெல்லம் முக்கியமான உணவு பொருளாக உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் வெல்ல ஆலைகளில் வெல்லம் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
பொதுவாக வேதிபொருட்கள் சேர்க்காத வெல்லம் பழுப்பு நிறத்திலேயே இருக்கும். ஆனால் சில ஆலைகளில் அதிக வெல்லக்கட்டிகள் செய்வதற்காகவும் நிறத்தை மாற்றுவதற்காகவும் அஸ்கா உள்ளிட்ட வேதிப்பொருட்களை பயன்படுத்துகின்றனர். அவ்வாறான வேதிப்பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் உள்ள வெல்ல ஆலைகளில் கலப்படம் நடக்கிறதா என்று உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அதில் கலப்படம் செய்யப்பட்டதாக சந்தேகம் ஏற்படுத்திய ஆலைகளில் 2500 கிலோ வெல்லத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் சிலவற்றை சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.