சென்னை விருகம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கியதாக கூறப்படும் வழக்கில் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை விருகம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த பாதையில் உள்ள ஆற்காடு சாலை ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோயில் சிக்னல் அருகே பேரிகாட் வைத்து ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன், போக்குவரத்து தடை செய்ய வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை நகர்த்தி தனது காரை எடுத்து செல்ல முயன்றுள்ளார்.
அப்போது மெட்ரோ கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேல், இந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறி வேல்முருகன் வந்த காரை தடுத்து நிறுத்தி உள்ளார். இதனால் வேல்முருகனுக்கும், உதவி மேலாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் உதவி மேலாளர் வடிவேலுவை, வேல்முருகன் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வடிவேலு புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வேல்முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.