சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முக்கியமான சில சாலைகளை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, தமிழகத்திலேயே அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் இருந்து வருகிறது. சென்னைவாசிகள் தவிர வேலை காரணமாக வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் சென்னையில் வசித்து வரும் நிலையில் நாள்தோறும் பல சாலைகளும் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலைகளை விரிவாக்கம் செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையின் அதிக போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் சாலைகளான ராதாகிருஷ்ணன் சாலை, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, நியூ ஆவடி ரோடு ஆகிய சாலைகளை விரிவுப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசு ஒப்புதல் பெற்று பணிகள் தொடங்க உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள், மெட்ரோ பணிகள் என பல பகுதிகளிலும் வேலைகள் நடந்து வரும் நிலையில் இந்த சாலை விரிவாக்கம் பணிகள் காரணமாக மேலும் சில இடங்களில் தற்காலிகமாக போக்குவரத்தில் சிக்கல் ஏற்படலாம் என்ற பீதியும் வாகன ஓட்டிகளிடையே உள்ளது.
Edit by Prasanth.K