தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தி வசூல் செய்யப்பட்டதை கண்டித்து தமிழக அளவில் கருப்புக்கொடி போராட்டம் நடத்த போவதாக திமுக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலாய் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் மின் கட்டணம் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை. இதனால் முந்தைய மாத கட்டணங்களையே கட்ட அரசு கூறியிருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் மின் கணக்கீடு செய்யப்பட்ட போது மொத்தமாக கணக்கிடப்பட்டதால் யூனிட்டுக்கு தொகை அதிகமானது. இது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து அரசு விளக்கமும் அளித்தது.
மின்கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று நடந்த திமுக கட்சி கூட்டத்தில் மின்கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 21 அன்று திமுகவினர் தங்கள் வீடுகளுக்கு வெளியே சமூக இடைவெளியை கடைபிடித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டுள்ளது.