Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்களைப் பற்றிய சர்ச்சை பேச்சு... ஆ.ராசாவை கண்டிக்காமல் சிரித்த திமுக வேட்பாளர் !!!

Advertiesment
ஆராசா
, சனி, 27 மார்ச் 2021 (22:52 IST)
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் திமுக கோட்டை என வர்ணிக்கப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து 26-3-2021 அன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக தலைவர் மு.க ஸ்டாலினுடன் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பேசிய அவர், ஸ்டாலின் படிப்படியாக வளர்ந்து முதல்வர் வேட்பாளராகவும், நாளைய முதல்வராகவும் வர உள்ளார். அவர் முறையாக பிறந்தவர் என்றும், செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி குறுக்கு வழியில் அதிகாரத்திற்கு வந்தவர் என்றும் விமர்சித்தார். 
 
பெண்மையை அவமதிக்கும் படியான ஆ.ராசாவின் இந்த திமிர் பேச்சு அதிமுக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரை இதுபோன்ற எடுத்துக்காட்டுடன் ராசா பேசியது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ராசாவுக்கு எதிராக  அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ராசாவின்  உருவ பொம்மையை எரித்து அண்ணா தொழிற்சங்கத்தினர் அயனாவரம் சிக்னலில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற போராட்டங்கள் மாநிலம் முழுவதும் விரிவடைந்து வருகிறது. இஸ்லாமிய பெண்களின் ஒட்டு மொத்த ஆதரவும் தனக்கு தான் இருக்கிறது கொக்கரித்து வந்த மருத்துவர் எழிலன், மேடையில் ஆ.ராசா முதல்வரின் தாயாரை அவமதித்து பேசிய ஒவ்வொரு வார்த்தைகளையும் ரசித்து ரசித்து கேட்டுக்கொண்டிருந்தது அருவெறுப்பின் உச்சம் என அரசியல் வட்டாரங்களில் கண்டனம் எழுந்துள்ளது. 
 
ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களையும் ஒப்பீடு செய்யும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. இராசா தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும் அருவருக்கத்தக்கவை. தந்தைப் பெரியாரின் திருவுருவப் படத்தை பின்னணியில் வைத்துக் கொண்டு பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் பேசப்பட்ட பேச்சுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. இருவரையும் ஒப்பிடுவதற்கு எவ்வளவோ நாகரிகமான வார்த்தைகள் இருக்கும் நிலையில் ஆ.இராசா பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் அவரது தரத்தையும், அவர் கொள்கை பரப்பு செயலாளராக பணியாற்றிய தி.மு.க.வின் தரத்தையும் அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.
 
தமிழ்நாட்டின் தேர்தல் களத்தில் பேசப்பட வேண்டியவை பிரச்சினைகள் தானே தவிர, பிறப்புகள் குறித்த அவதூறுகள் அல்ல.  முதலமைச்சரைப் பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லாததால் தான் திமுக இத்தகைய அருவருக்கத்தக்க, ஆபாசமான, இழிவான பரப்புரையை முன்னெடுத்திருப்பதாக தோன்றுகிறது. அரசியலில் இத்தகைய அணுகுமுறையை பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் ஆதரித்தது கிடையாது.  நடிகை குஷ்பு திமுகவில் இருந்த போது அவரையும், கலைஞரையும் தொடர்புபடுத்தி ‘‘இன்னொரு மணியம்மை’’ என்ற தலைப்பில் புலனாய்வு வார இதழ் செய்திக் கட்டுரை வெளியிட்ட போது, அதைக் கடுமையாக கண்டித்த ஒரே அரசியல் தலைவர் நான் தான். 2016 தேர்தலில் போது கலைஞர் அவர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ‘‘உலகின் ஆதித் தொழில்’’ என்று கூறி அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்த போதும் அதை முதன்முதலில் கண்டித்தது நான் தான். அந்த வகையில் முதலமைச்சரை இழிவுபடுத்தும் வகையிலான இராசாவின் அருவருக்கத்தக்க வார்த்தைகளை கடுமையாக கண்டிக்கிறேன் என கடுமையாக சாடியுள்ளார். 
 
இது போன்று பெண்களை இழிவுபடுத்திப் பேசும் பாரம்பரியம் திமுகவில் நெடுங்காலமாக உண்டு. 'நாடாவை அவிழ்த்துப் பார்த்தால் தெரியும்' என்பதில் தொடங்கி பேரன் உதயநிதி சசிகலா பற்றிப் பேசுவது வரை அந்தப் பாரம்பரியம் நீள்கிறது. இந்தப் பேச்சுக்கள் spontaneous ஆக அந்த நொடியில் வெளிப்படுபவை. ஆழ்மனதில் பெண்களைப் பற்றி இருக்கும் அபிப்பிராயம்தான் அந்தக் கணத்தில் வெளிப்படுகிறது. திமுகவை பொறுத்தவரை அவர்களை விமர்சிப்பவர்கள் பெண்னாக இருந்தால் உடல் ரீதியாகவும், ஆணாக இருந்தால் சாதிய ரீதியாகவும் பேசுவது தொடர்ந்து வருகிறது என மூத்த பத்திரிகையாளர் மாலன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
முதலமைச்சரின் தாயாரை அவமதிக்கும் விதமாக பேசிய ஆ.ராசாவிற்கு திமுக மகளிரணி தலைவியும், எம்.பி.யுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். ‘அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும்’ என ஆ.ராசாவிற்கு நச்சென குட்டு வைத்து ட்வீட் போட்டுள்ளார். இப்படி நான்குபுறங்களில் இருந்தும் ஆ.ராசா மீது விமர்சனங்கள் எழுப்பப்பட்டாலும் திமுக தலைமை எதையுமோ கண்டுகொள்ளாமல் இருப்பது  தமிழக மக்களையும், ஆயிரம் விளக்கு தொகுதி பெண் வாக்காளர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலன் முகத்தில் ஆசிட் வீசித் தாக்கிய காதலி !