Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுகிறார்கள் ; ஏதேனும் செய்யுங்கள் - அஜித்திற்கு சாரு நிவேதிதா கடிதம்

Advertiesment
ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுகிறார்கள் ; ஏதேனும் செய்யுங்கள் - அஜித்திற்கு சாரு நிவேதிதா கடிதம்
, திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (14:34 IST)
விவேகம் படம் பற்றிய விமர்சித்ததால், நடிகர் அஜித்தின் ரசிகர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுகின்றனர் என எழுத்தாளர் சாரு நிவேதிதா கடிதம் எழுதியுள்ளார்.


 

 
நடிகர் அஜித் நடித்த விவேகம் படம் கடந்த 24ம் தேதி வெளியானது. இந்த படம் இணையத்தில் மோசமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இது அஜித் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவர்கள் மீது அவர்கள் மிரட்டல் மற்றும் மோசமான கருத்துகளால் அஜித் ரசிகர்கள் வசை பாடி வருகின்றனர்.
 
இந்நிலையில், எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது இணைய தளபக்கத்தில் நடிகர் அஜித்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
மார்ஜினல் மேன் எடிட்டிங் வேலையில் மூழ்கியிருப்பதால் எனக்குக் கொலை மிரட்டல் விட்ட உங்கள் ரசிகர் மேல் போலீஸில் புகார் கொடுக்க முடியவில்லை.  உங்கள் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டு பல எண்களிலிருந்து ஆபாச வசைகள் வந்தன.  மெட்ராஸ் செண்ட்ரல் தளத்தில் என் பேச்சுக்குக் கீழே உள்ள பின்னூட்டங்களில் தங்கள் அடையாளத்துடன் தங்கள் தொலைபேசி எண்ணுடன் என்னை ஆபாசமாகப் பேசியிருக்கிறார்கள்.   இதெல்லாம் சமூக மனநோய்.  
 
இதையெல்லாம் இங்கே ஏன் எழுதுகிறேன் என்றால், இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நீங்கள் ஏன் எதுவுமே சொல்லவில்லை?  என்னை விட ப்ளூ ஷர்ட் மாறனுக்கு அதிக கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.  எல்லோரும் தங்கள் தொலைபேசி எண், பெயர் எல்லாம் போட்டுத்தான் மிரட்டுகிறார்கள் என்பதால் அவர்கள் வெறுமனே பயமுறுத்தவில்லை; சொன்னதைச் செய்யவும் தயாராக இருக்கிறார்கள் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.  உங்கள் ஒரு ரசிகர் ட்விட்டர் பக்கத்தில் என் தொலைபேசி எண்ணைக் கொடுத்து எல்லோரையும் என்னை மிரட்டச் சொல்லியிருக்கிறார்.  உண்மையிலேயே என் உயிர் பற்றி எனக்குப் பயமாக இருக்கிறது.
 
அஜித், என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை.  நான் இதுவரை 80 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.  அதில் 20 புத்தகங்கள் மலையாளத்தில் உள்ளன.  உலக சினிமா பற்றி மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.  ஆங்கிலத்தில் என் எழுத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  உங்கள் விவேகம் பற்றி நியாயமான முறையில் மெட்ராஸ் செண்ட்ரல் தளத்தில் விமர்சனம் செய்தேன்.  நான் பொதுவாக தமிழ் சினிமா பார்ப்பதில்லை.  ஆரண்ய காண்டம் போன்ற நல்ல படங்களை – நண்பர்கள் சிபாரிசு செய்தால் மட்டுமே பார்ப்பது வழக்கம். 

webdunia

 

 
ஆனால் மெட்ராஸ் செண்ட்ரலில் தமிழ்ப் படங்களை விமர்சனம் செய்யும் பணியைத் தொடங்கியிருப்பதால் விவேகத்தை முதல் நாள் பார்த்தேன்.  நாகரீகமான வார்த்தைகளையே பயன்படுத்தி விமர்சித்தேன்.  சினிமாவையும் மீறி உங்கள் மீது நான் கொண்டுள்ள மதிப்பும் மரியாதையுமே அதற்குக் காரணம்.  இல்லாவிட்டால் விவேகத்தில் இடைவேளை வரை இயக்குனர் சிவா கொடுத்த டார்ச்சருக்குக் கன்னாபின்னா என்றுதான் திட்டியிருக்க வேண்டும்.  அதற்காக இடைவேளைக்குப் பிறகு டார்ச்சர் இல்லை என்று அர்த்தமில்லை.
 
சரி, போகட்டும்.  உங்கள் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டு என் தொலைபேசியில் கொலை மிரட்டல் விட்டுக் கொண்டும் ஆபாச வசைகளை எழுதிக் கொண்டும் இருப்பவர்களை நீங்கள் எப்போது கண்டிக்கப் போகிறீர்கள்?  அல்லது, ஒன்று செய்யுங்கள்.  என் வீடு சாந்தோம் – மயிலாப்பூர் எல்லையில் எம்.எஸ். விஸ்வநாதனின் வீட்டுக்கு எதிரே உள்ளது.  சீக்கிரம் ஒருநாள் என் வீட்டுக்கு வாருங்கள்.  உங்களுக்குப் பிடித்த பிரியாணி செய்து தருகிறேன்.  உங்களுக்கு நான் பிரியாணி பரிமாறுவதை செல்ஃபீ  எடுத்து ட்விட்டரில் போட்டால்தான் கொலைகார ரசிகர்கள் என்னை உயிரோடு விடுவார்கள்.  சீக்கிரம் வாருங்கள்.
 
பின்குறிப்பு: நீங்கள் தனிப்பட்ட முறையில் எத்தனை நல்லவராக இருந்தாலும் தவிர்க்கவே முடியாமல் ஒரு சிறுதெய்வம் ஆகி விட்டீர்கள்.  நடிகர்கள் அத்தனை பேருமே சிறுதெய்வங்கள்தான்.  உங்கள் ரசிகர்கள் எல்லோரும் பக்தர்கள்.  அதனால்தான் படத்தை விமர்சித்தால் தங்கள் கடவுளை விமர்சித்து விட்டதாக எண்ணிக் கொலை மிரட்டல் விடுகிறார்கள்.  தமிழ்நாட்டில் சினிமா ஒரு மதம்.  அதை நீங்கள் புரிந்து கொண்டே ஆக வேண்டும்.  அரசியலில் கூட இந்த நிலை இல்லை.  நான் ஜெயலலிதாவை விமர்சித்திருக்கிறேன்; கருணாநிதியை விமர்சித்திருக்கிறேன்.  மோடியை விமர்சிக்கிறேன். இதுவரை ஒரு மிரட்டல் வந்ததில்லை.  உங்களுடைய ஒரே ஒரு படத்தை நாகரீகமான முறையில் விமர்சித்ததற்குக் கொலை மிரட்டல்; ஆபாச வசை.
 
இந்த நிலையை மாற்ற முயலும் என் போன்ற சிறியவர்களுக்கு உங்களைப் போன்ற கடவுள்களின் ஆதரவு தேவை.  அட்லீஸ்ட் நான் கடவுள் இல்லை என்று உணர்ந்து கொண்ட உங்களைப் போன்ற நடிகர்கள் இதற்குத் தங்களால் ஆன ஆதரவை நல்க வேண்டும்.
 
என அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிறுத்தப்பட்ட ஜியோ போன் முன்பதிவு: காரணம் என்ன!!