சென்னையில் கேன் தண்ணீர் விற்பனையாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் குடிதண்ணீர் கேன்களின் விலை ஏற தொடங்கியுள்ளது.
தமிழக அரசிடம் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள் தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.
இதற்கு கேன் குடிநீர் விற்பனையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனுமதி பெறாத ஆலைகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், சீல் வைக்கக்கூடாது என்றும், இதனால் கேன் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு மக்கள் சிரமப்படுவார்கள் என கூறியுள்ளனர். தற்போது ஆலைகள் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேன் தண்ணீர் விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சிலர் கேன் தண்ணீர் விற்பனையை நிறுத்தி போராட்டம் செய்ய தொடங்கியுள்ளனர்.
விற்பனையாளர்களின் போராட்டம் மற்றும் குடிநீர் ஆலைகள் மூடல் ஆகியவற்றால் கேன் தண்ணீருக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதனால் மற்ற கேன் தண்ணீர் நிறுவனங்கள் விலையை அதிகரித்து விற்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் நகர மக்கள் கேன் தண்ணீரையே குடிநீராக பயன்படுத்தி வருவதால் இது மக்களுக்கு பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது.