Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து.! திமுக அரசுக்கு சீமான் கண்டனம்.!!

Seeman

Senthil Velan

, வெள்ளி, 12 ஜூலை 2024 (15:27 IST)
அரசு மருத்துவர்கள் மேற்படிப்பு படிப்பதற்கான சேவை ஒதுக்கீட்டை ரத்து செய்யும் முடிவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
 
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான சேவை ஒதுக்கீட்டு இடங்களை திமுக அரசு ரத்து செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. ஏழை மக்களின் நலன் காக்க இரவு பகல் பாராமல் சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் உயர்கல்வி கனவை திமுக அரசு சிறிதும் மனச்சான்று இன்றிச் சிதைப்பதென்பது மிகுந்த வேதனையளிக்கிறது. 

அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்குவோம் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதியளித்து அதிகாரத்திற்கு வந்த திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளைக் கடந்த பிறகும் அவர்களின் கோரிக்கையை இன்று வரை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. 

அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதிய உயர்வு அளிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றம் வலியுறுத்திய பிறகும், அதற்காக மருத்துவப்பெருமக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பிறகும், உரிய ஊதியத்தை வழங்க மறுக்கும் திமுக அரசு, தற்போது அவர்கள் மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பையும் தடுத்துக் கெடுப்பதென்பது அரசு மருத்துவர்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
 
சேவை மனப்பான்மையுடன் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களிலெல்லாம் அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றும் மருத்துவர்கள் உயர் கல்வி கற்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் புரிந்து ஊக்கப்படுத்த வேண்டிய அரசு, அதனைச் செய்யத்தவறி, சேவை இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்வதென்பது கொடுங்கோன்மையாகும். 
 
திமுக அரசின் இத்தகைய எதேச்சதிகாரப்போக்கு அரசு மருத்துவர்களுக்கு மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துவதோடு, தமிழ்நாட்டு ஏழை எளிய மக்கள் உயர் மருத்துவம் பெறுவதில் மிகப்பெரிய பின்னடைவையும் ஏற்படுத்த வழிவகுக்கும்.

 
ஆகவே, அரசு மருத்துவர்கள் மேற்படிப்பு படிப்பதற்கான சேவை ஒதுக்கீட்டை ரத்து செய்யும் முடிவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுவன் தலையில் ஸ்டேப்லரால் 14 தையல்.! போலி மருத்துவர் கைது..!!