பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித் தொகை வழங்குவதுடன், அரசு வேலை வாய்ப்பில் 1% இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
அரசு வேலைவாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற பட்டதாரிகள் சங்கத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கடந்த 12ஆம் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை கோடம்பாக்கம் பாலத்தில் மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அதேபோல் இன்று காலை பூந்தமல்லி சாலையில் திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித் தொகை வழங்குவதுடன், அரசு வேலை வாய்ப்பில் 1% இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.