Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத்திய அரசு அளித்த நிதியை தவறாக பயன்படுத்துகிறார்கள்!? – ஆளுனர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

Advertiesment
RN Ravi
, வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (18:54 IST)
மத்திய அரசு மாநிலங்களுக்கு அளித்துள்ள நிதியை உரிய திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துகிறது! தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ராஜபாளையத்தில் குற்றச்சாட்டு!


 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் விஸ்வகர்ம யோஜனா திட்டத்தின் கீழ் 18 வகை கைவினைக் கலைஞர்களை சந்தித்து ஆலோசனைக் கூட்டம் பி.எஸ். குமாரசாமி ராஜா திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்புரையாற்றினார்.

 அது சமயம் மத்திய அரசின் திட்டமான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தில் 40 சதவீத நிதியை பயன்படுத்தாமல் வேறு திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு பயன்படுத்தி இருப்பதாக குற்றம் சாட்டி பேசினார்.

தமிழ்நாடு சாலியர் நெசவாளர் சங்கங்கள் சார்பாக டாக்டர் ஆறுமுகப்பெருமாள் நிகழ்ச்சியில் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு சாலியர் நெசவாளர் சங்கம் சார்பில் டி.ஏ. சுப்பிரமணியம் நெசவாளர்களுக்கு உள்ள பிரச்சனைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

 புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட ஏராளமானோர் ஆளுநர் ரவிக்கு பொன்னாடை, மாலை அணிவித்து வரவேற்றனர்.

 பின்னர் கூடியிருந்த மக்களிடையே ஆளுநர் ரவி பேசும்போது கூறியதாவது:.

" விஸ்வகர்மா கைவினை கலைஞர்கள் இல்லாமல் உலகத்தில் எந்த வேலையும் நடைபெறப் போவதில்லை..

 முன்பு நீங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தீர்கள். பிரதமர் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் உங்களை எல்லாம் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இத்திட்டம் குறித்து சரிவர புரிதல் இல்லை என சிலர் எதிர்த்து பேசுகிறார்கள்.

நமது பணிகளை நம்மிடம் பெற்று 80 சதவீதம் முதலாளிகள் வளர்ந்து கொண்டே போகிறார்கள்.

வேலையாட்களாகிய நாம் குறைந்து கொண்டே போகிறோம். எனவே பிரதமர் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் உங்களை எல்லாம் ஒருங்கிணைத்து பண்டைய கலாச்சார நோக்கில் தலை சிறந்த பொறியாளர்களாகவும் புனித ஆத்மாக்களாகவும்மீட்டெடுக்க முயன்று வருகிறார்.

 துவாரகா போன்றவைகளை கட்டி வடிவமைத்த விஸ்வகர்ம மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இத்திட்டம் பாரதப் பிரதமர் மோடி துவக்கியுள்ளார்.

 
முன்பு துரதிஷ்டவசமாக நீங்கள் ஓரம் கட்டப்பட்டிருந்தீர்கள். தற்போது பாரதப் பிரதமர் மோடி உறுதியான கட்டமைப்பை உங்களுக்காக ஏற்படுத்தி விஸ்வகர்மா மக்களுக்கு அங்கீகாரம் தந்து பாராட்டி வருகிறார்.

 
புதிய பாராளுமன்ற கட்டிடம் சிறப்பாக கட்டி முடித்து ஜி 20 மாநாடு சிறப்பாக நடத்தி முடித்த பின்னர் அனைத்து விஸ்வகர்மா கலைஞர்களை அழைத்து சிறப்பு செய்து அவர்களுடன் ஒன்றாக இருந்து படம் எடுத்துக் கொண்டவர் பிரதமர் மோடி.

 உங்களது ரத்தமும் வியர்வையும் கொண்டு கட்டப்பட்டது தான் பாரத் மண்டபம் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடம் என்று கூறி பாராட்டினார்.

இத்திட்டத்தின் மூலம் 18 வகையான கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் உருவாகும். பொருளாதாரம் உயரும். கௌரவமாக நிமிர்ந்து வேலை செய்யும் அளவிற்கு நிலை உயரும். சமூக நீதி பாதுகாக்கப்படும்.

தகப்பனார் செய்த வேலையை மகன் செய்வது தவறாக வழி வகுக்காது. இது குலக்கல்வி திட்டம் அல்ல. நாம் ஒன்று பட வேண்டும் என்பதுதான் முக்கியம்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பல மாநில அரசுகள் செயல்படுத்தாமல் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு மாநில அரசின் திட்டங்களில் பல குறைபாடுகள் உள்ளது. மத்திய அரசின் தணிக்கை குழு அறிக்கையின்படி  வீடு இல்லாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி தருவதற்காக ஒதுக்கப்பட்ட 40 சதவீத நிதியை தமிழ்நாடு அரசு வீடு கட்டுவதற்காக பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக வேறு திட்டங்களுக்கு செலவு செய்திருப்பதாக தணிக்கை குழு அறிக்கை தெரிவிக்கிறது.

 இது எந்த வகையில் நியாயம்? ரயில்வே துறையில் தமிழ்நாட்டிற்கு மட்டுமே 35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

 25 ரயில் நிலையங்களை நவீனப்படுத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன் பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களிடம் அறியாமை அதிகமாக உள்ளது.

பல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருப்பதாக என்னிடம் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டில் தொழில் செய்வதற்கான நிதி உதவி வழங்கப்படுவதில்லை. உங்கள் பிரச்சனைகளை மத்திய மாநில அரசுகளிடம் எடுத்துச் சொல்லி என் குடும்பத்தில் ஒருவராக உங்களை பார்க்கிறேன்.

 உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருவேன் என்று உறுதி கூறுகிறேன்-இவ்வாறு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜபாளையத்தில் பேசினார். முடிவில் தையல் கலைஞர்கள் சங்க தலைவர் கதிரவன் நன்றி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெங்களூரில் கடும் போக்குவரத்து நெருக்கடி.. போக்குவரத்து பிரிவு ஏ.டி.ஜி.பி இடமாற்றம்.!