Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்எல்சி-க்கு அடிமையாக செயல்படுகிறது தமிழக அரசு: அன்புமணி குற்றச்சாட்டு..!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (14:38 IST)
என்எல்சி-க்கு அடிமையாக செயல்படுகிறது தமிழக அரசு என பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
"கடலூர் மாவட்டத்தில் 64,750 ஏக்கர் நிலங்களில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கான குத்தகை என்எல்சிக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், 2036-ம் ஆண்டு வரை அந்தக் குத்தகை நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, மூன்றாவது சுரங்கம் அமைப்பதை கைவிட வேண்டும் என்று தமிழக அரசிடமிருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. உழவர்களின் நலன் காக்கும் அரசு என்று பெருமை பேசிக் கொள்ளும் தமிழக அரசு, எந்த அளவுக்கு உழவர்களுக்கு துரோகம் செய்கிறது என்பதற்கு இவையே சான்றுகள் ஆகும்.
 
 
 
 
 
 
மாநிலங்களவையில் நான் எழுப்பிய வினாக்களுக்கு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுத்து மூலம் அளித்த விடையில் இந்த விவரங்களை கூறியுள்ளார். கடலூர் மாவட்ட உழவுக்கும், தமிழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கும், பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள என்எல்சி நிறுவனத்தை தமிழ்நாட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது தான் பாமகவின் நோக்கம் ஆகும். இதற்கு தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவு உள்ளது.
 
 
ஆனால், மக்களின் உணர்வுகளை மதிக்காத தமிழக அரசு, உழவர் நலன்களையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் காற்றில் பறக்கவிட்டு, என்எல்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் இந்த உழவர் விரோத போக்கை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாடாளுமன்றத்தில் வினாக்களை எழுப்பி மேற்கண்ட தகவல்களை மத்திய அரசிடமிருந்து பெற்றேன்.
 
 
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 64,750 ஏக்கரில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கான குத்தகை உரிமத்தை தமிழக அரசிடமிருந்து என்எல்சி நிறுவனம் பெற்றுள்ளது. இந்த சுரங்க குத்தகை உரிமம் 2036ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. என்எல்சி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில், அதன் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்துக்கான தேவை இருந்தது. ஆனால், இப்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியிருப்பதாக தமிழக அரசே கூறிக் கொள்ளும் நிலையில், என்எல்சியின் குத்தகை உரிமம் புதிதாக வழங்கவோ, நீட்டிக்கப்பட்டிருக்கவோ கூடாது.
 
கடந்த 1956-ம் ஆண்டு முதல் 67 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் என்எல்சி நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் அனல் மின்நிலையங்களால் கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. நிலத்தடி நீர்மட்டம் குறைவு, மழைக்காலங்களில் வெள்ளம், சுற்றுச்சூழல் சீரழிவு, நிலக்கரி துகள்கள் பறப்பதால் மனிதர்களுக்கும் பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள், அனல் மின்நிலையங்களில் நிலக்கரி எரிக்கப்படுவதால் வெளியாகும் வேதிப்பொருட்களால் மக்களுக்கு ஏற்படும் உடல்நலக் கேடுகள் ஆகியவற்றால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும், அதை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 20 லட்சம் பேரும் எதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த உண்மைகளை கருத்தில் கொண்டு, மக்கள் நலனை மனதில் கொண்டு என்எல்சிக்கு வழங்கப்பட்டுள்ள குத்தகை உரிமத்தை இப்போதைய அரசு ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதிலிருந்து கடலூர் மாவட்ட மக்கள் நலனிலும், உழவர்கள் நலனிலும் தமிழக அரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்பது ஐயமின்றி உறுதியாகியிருக்கிறது.
 
குத்தகை உரிமம் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட ஆபத்துகள் இத்துடன் நிற்கவில்லை. உரிமம் வழங்கப்பட்ட நிலங்களில் 37,256 ஏக்கர் நிலங்களில் இதுவரை சுரங்கங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள நிலங்களில் சுமார் 12,125 ஏக்கர் பரப்பளவில் மூன்றாவது சுரங்கத்தை அமைக்க என்எல்சி தீர்மானித்து உள்ளது. இந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உழவர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கும். அதனால், சுமார் 50,000 குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்திருப்பார்கள். அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும், மனித உடல்நலத்திற்கும் அளவிட முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கக் கூடும். இந்த பாதிப்புகள் எந்த வகையிலும் சரிசெய்ய முடியாதவை.
 
என்எல்சியின் மூன்றாவது சுரங்கம் அமைக்கப்படவிருக்கும் 26 கிராமங்களில் 9 கிராமங்கள் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருபவை. மீதமுள்ள கிராமங்கள் அனைத்தும் காவிரி பாசனப் பகுதியில் அமைந்திருப்பவை. இந்தப் பகுதியில் நிலக்கரி சுரங்கள் அமைப்பது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்திற்கு எதிரானதாகும். அதனால், மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தை கடுமையாக எதிர்க்க வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால், அந்தக் கடமையை சற்றும் உணராத தமிழக அரசு, மூன்றாவது சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், வரவேற்கிறது. காவிரி பாசனப் பகுதி உழவர்களுக்கு இதைவிட கொடிய துரோகத்தை எவரும் செய்துவிட முடியாது.
 
காவிரி பாசன மாவட்டங்களில் புதிய நிலக்கரி சுரங்கத் திட்டங்கள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட போது, அதை பாமக தான் முதன்முதலில் எதிர்த்தது. சட்டப்பேரவையிலும் இது தொடர்பாக பிரச்சினை எழுப்பியது. அதன் பயனாக அத்திட்டங்கள் திரும்பப்பெறப்பட்ட நிலையில். பாமகவின் வெற்றிக்கு சொந்தம் கொண்டாடிய தமிழக முதலமைச்சர் தாமும் டெல்டாக்காரன் என்று பெருமை பேசிக்கொண்டார். அதேபோல் கடலூர் மாவட்டத்தில் என்எல்சியின் மூன்றாவது சுரங்கத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினால், அதற்கு பதில் பேசாமல் அமைதி காத்து வருகிறார். மூன்றாவது சுரங்கத்தை தடுப்பதில் தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் அக்கறை இல்லை.
 
என்எல்சி ஒன்று மற்றும் இரண்டாவது சுரங்கங்களுக்கு நிலம் எடுப்பதை எதிர்த்து போராடும் போதெல்லாம், அவை ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்களின் விரிவாக்கம் தான் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படியானால், புதிதாக தொடங்கப்படவுள்ள மூன்றாவது சுரங்கத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். அதுதான் மக்கள் நல அரசின் அடையாளம். ஆனால், அவ்வாறு செய்யாததன் மூலம் காவிரி பாசன மாவட்டங்களிலேயே தாம் சார்ந்த தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஒரு நீதி, கடலூர் மாவட்ட மக்களுக்கு ஒரு நீதி என்று முதல்வர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
 
தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலிலும், கடலூர் மாவட்டம் மக்கள் நலனிலும், தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் 64, 750 ஏக்கர் நிலங்களில் சுரங்கம் அமைக்க என்எல்சிக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள குத்தகை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அத்துடன் மூன்றாவது சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழக அரசை உழவர்களின் எதிரியாகவும், என்எல்சி நிறுவனத்தின் அடிமையுமாகவே தமிழக மக்கள் பார்ப்பார்கள். இந்த சிக்கலில் தமிழக அரசின் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும், மூன்றாவது சுரங்கத் திட்டத்தை எதிர்த்தும், சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் பாமக கடுமையான போராட்டங்களை நடத்தும்" 
 
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

சென்னை அண்ணா சாலை ஜிபி சாலை சந்திப்பில் U திருப்பம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!

விசிக, நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை.. அரசாணை வெளியீடு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அறிவிப்பு.. காங்கிரஸ் அதிருப்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments