Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காவிக்கு பக்கா வார்னிங் கொடுத்த நமது அம்மா... முழு விவரம்!

Advertiesment
காவிக்கு பக்கா வார்னிங் கொடுத்த நமது அம்மா... முழு விவரம்!
, திங்கள், 16 நவம்பர் 2020 (10:37 IST)
வேல் யாத்திரை குறித்து அதிமுகவின் நமது அம்மா நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த நவம்பர் 6 வேல் யாத்திரை தொடங்கிய நிலையில் தமிழக அரசு தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதாக பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் வேல் யாத்திரை திட்டமிட்டப்படி நடக்கும் என்றும் நவம்பர் 17 முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடங்கும் என்றும் பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். 
 
இந்நிலையில் இது குறித்து அதிமுகவின் நமது அம்மா நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. சாதியாலும், மதத்தாலும் மக்களை பிளவுப்படுத்துகிற உள்நோக்கம் கொண்ட ஊர்வலங்களை, யாத்திரைகளை அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகம் ஆமோதிக்காது, ஆதரிக்காது என்பதை உரியவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். 
 
மனிதத்தை நெறிப்படுத்தவே மதங்களின்றி, வெறிப்படுத்துவதற்கு அல்ல என்பதை இந்திய தேசத்துக்கே உணர்த்துகிற பகுத்தறிவு மண் இந்த திராவிடத்தின் தொட்டிலாம் தமிழகம் என்பதை தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
 
ஓம், ஓம் என்று ஒலிக்கும் இந்து மதத்தின் பொருள் அமைதி, நிறைவு கொள் என்பதாகும். அதுபோலவே ஆமென் என்கிற கிறிஸ்தவத்தின் பொருளுடைய மந்திரத்தின் அர்த்தமும் அமைதி கொள், சாந்தமடை என்பதாகும். அதுபோலவே இஸ்லாம் என்கிற வார்த்தையும் அமைதி, சமத்துவம் என்பதையே உணர்த்துகிறது.
 
இப்படி, மதங்கள் அனைத்தும் போதிப்பது மானுட சமூகத்தின் அமைதியையும், அன்பையும், சாத்வீகத்தையும்தான். இவ்வாறு இருக்க அந்த மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட அதிமுக அனுமதிக்காது. 
 
இதனை வேல் யாத்திரை செல்ல விழைபவர்கள் உணர வேண்டும். அமைதி தவழும் தமிழகத்தில் மக்கள் பின்பற்றும் ஒற்றுமையும், ஒருமைப்பாட்டையும் உணர்ந்து நடக்க வேண்டும். அது கருப்பர் கூட்டமானாலும் சரி, காவி கொடி பிடிப்பவர்களானாலும் சரி என்று அந்த செய்தியில் குறுப்பிடப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடும்பம் நடத்துறது என்கூட.. கல்யாணம் வேற பெண்ணுடனா? – இளைஞரை கத்தியால் குத்திய பெண்!