அமித்ஷா வருகை தமிழகத்தில் பலருக்கு பயத்தை ஏற்படுத்தும் என பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.
பாராளுமன்ற பொதுத்தேர்தலிலும் சரி, மாநில சட்டமன்றத் தேர்தலிலும் சரி பாஜகவின் வெற்றிக்கு அமித்ஷாவின் அரசியல் தந்திரம் தான் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் பீகார் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துவிட்ட பாஜக அடுத்ததாக தமிழகத்தை குறி வைத்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து இதுவரை தமிழகத்தில் ஒரு எம்எல்ஏ பதவியை கூட பிடிக்காத பாஜக முதல் முறையாக அதிக இடங்களில் போட்டியிட்டு அதிக இடங்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது.
இதனை அடுத்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை செய்வதற்காக நவம்பர் 21ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பாஜக தமிழக தலைவர்களுடன் தேர்தல் குறித்து அமித்ஷா ஆலோசனை செய்வார் என தெரிகிறது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் எல்.முருகன், அமித்ஷாவின் வருகை குறித்து பேசினார். அவர் கூறியதாவது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகின்ற பொழுது பாஜக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அமித்ஷாவுடன் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில முக்கிய நிர்வாகிகள் சமூக இடைவெளியுடன் பங்கேற்பர்.
அமித்ஷா வருகை தமிழகத்தில் பலருக்கு பயத்தை ஏற்படுத்தும். குறிப்பாக உத்தரப்பிரதேசம் சென்றார். அங்கு ஆட்சி ஏற்படுத்தினார். அதேபோல் அவர் செல்லும் மாநிலங்களில் பாஜக ஆட்சியை ஏற்படுத்துகிறார். எனவே அவர் தமிழகம் வருவது பாஜகவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல பலருக்கு பயத்தை கொடுக்கிறது என பேட்டியளித்துள்ளார்.