Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

30 வன்கொடுமை, 15 படுகொலை.. தமிழ்நாட்டையே அலறவிட்ட சைக்கோ சங்கர்! - எப்படி செத்தான் தெரியுமா?

Advertiesment
Psycho shankar

Prasanth Karthick

, செவ்வாய், 21 ஜனவரி 2025 (18:31 IST)

நாடு முழுவதும் தற்போது தொழில்நுட்ப வசதிகள் அதிகமாக உள்ளபோதே பல வன்கொடுமை, கொலை சம்பவங்கள் தொடர் கதையாக இருந்து வருகிறது. இவ்வளவு வசதிகள் இல்லாத காலத்தில் எப்படி இருந்திருக்கும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழ்நாடு, ஆந்திராவையே பீதியில் ஆழ்த்திய வன்கொடுமை, கொலை குற்றவாளி ‘சைக்கோ’ சங்கரை பற்றி உங்களுக்கு தெரியுமா? லண்டனில் பிரபல சைக்கோ கில்லராக அறியப்படும் ஜாக் தி ரிப்பரால் 5 பெண்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவதுண்டு. அந்த ஜாக் தி ரிப்பரையும் மிஞ்சும் கொடூர கொலையாளிதான் இந்த சைக்கோ சங்கர்.

 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கன்னியம்பட்டி பகுதியை சேர்ந்தவன் தான் ஜெய்சங்கர். 7 வது வகுப்புடன் படிப்பை நிறுத்திய ஜெய்சங்கர் லாரி டிரைவராக சேர்ந்து வெளி மாநிலங்களுக்கும் லாரி ஓட்டி வந்ததன் வாயிலாக இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளையும் கற்றுக் கொண்டான்.

 

பெண்கள் மீது இச்சைக் கொண்ட ஜெய்சங்கர் ஆங்காங்கே சில பெண்களை வன்கொடுமை செய்வதும், கொலை செய்வதுமாக இருந்து வந்துள்ளான். ஆனால் முதன்முதலில் பிடிப்பட்டது 2009ம் ஆண்டில் பெண் போலீஸ் ஒருவரை கடத்தி கொன்றபோதுதான். பெருமநல்லூரில் பந்தோபஸ்து பணியில் இருந்த ஜெயமணி என்ற பெண் கான்ஸ்டபிளை கடத்தி சென்று வன்கொடுமை செய்து கொடூரமாக கொலையும் செய்தான். ஆகஸ்ட் 29ல் நடந்த இந்த கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு அக்டோபர் 19ல் ஜெய்சங்கரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
 

 

அதன்பின்னர்தான் ஜெய்சங்கர் மீது மேலும் பல வன்கொடுமை, கொலை வழக்குகள் இருப்பது அம்பலமானது. அதுமுதல் ‘சைக்கோ’ சங்கர் என்ற பெயரால் ஜெய்சங்கர் அழைக்கப்பட்டான்.

 

2011ம் ஆண்டிற்குள் ஜெய்சங்கர் மீது 13 வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்குகள், 7 கொலை வழக்குகள் குவிந்திருந்தது. சேலத்தில் தொடரப்பட்ட கொலை வழக்கு ஒன்றில் மார்ச் 18, 2011ல் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துவிட்டு திரும்ப கோவை சிறைக்கு கொண்டு செல்லும்போது சேலம் பேருந்து நிலையம் அருகே தப்பி ஓடினான் சைக்கோ சங்கர்.

 

அதன்பின்னர் கர்நாடகாவில் சென்று பதுங்கிய ஜெய்சங்கர் மே 4, 2011ம் ஆண்டில் கர்நாடகா போலீஸால் கைது செய்யப்பட்டான். இதற்கிடையே இருந்த 2 மாதங்களுக்குள் கர்நாடகாவில் 6 பெண்களை வன்கொடுமை செய்து கொன்றதுடன், ஒரு நபரையும், குழந்தையையும் கூட கொடூரமாக கொன்றான் சைக்கோ சங்கர்.

 

சைக்கோ சங்கருக்கு ஏப்ரல் 29, 2013ம் ஆண்டில் ஓசூர் துணை நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது. அப்போதும் செப்டம்பர் 1ம் தேதி தப்பி சென்றான் சைக்கோ சங்கர். கர்நாடகா போலீஸ் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு 5 நாட்கள் கழித்து அவனை பிடித்ததுடன், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் கடும் காவலில் அடைத்தனர். 

 

அங்கு சிறையில் இருந்த சைக்கோ சங்கர் பிப்ரவரி 27, 2018 அன்று சவரக்கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துக் கொண்டான். 

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகா கும்பமேளாவில் பாசிமணி விற்கும் இளம்பெண்.. செல்ஃபி எடுக்க குவிந்த கூட்டத்தால் பரிதாபம்..!