பாடகி நித்யஸ்ரீ கணவர் அடையாறு கூவத்தில் குதித்து தற்கொலை
, வியாழன், 20 டிசம்பர் 2012 (16:07 IST)
கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் சென்னை அடையாறு கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடையாறு கூவம் ஆற்றில் இன்று நண்பகல் 12.45 மணிக்கு மாருதி காரில் வந்த ஒருவர் திடீரென காரை நிறுத்தி கூவம் ஆற்றில் குதித்துவிட்டார். அப்போது வாகனத்தில் சென்றவர்கள் இதனை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்த காவல்துறையினர் கூவத்தில் விழுந்த நபரை 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்டனர். உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.உடலை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதைத் தொடர்ந்து அந்த உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது பாடகி நித்யஸ்ரீ கணவர் மகாதேவன் என்று தெரியவந்துள்ளது.மகாதேவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.