தமிழகம் முழுவதும், சுமார் 28 ஆயிரத்து 500 சத்துணவுப் பணியாளர்களை நியமித்த தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்று தெரிவித்துள்ள மதுரை உயர் நீதிமன்ற கிளை, அதுதொடர்பான அரசாணையையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழகத்தில், காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் நியமனம் செய்வது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் அரசு ஆணை வெளியிடப்பட்டது.
இதில் சம்பந்தப்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் சுற்றளவில் இருப்பவர்களுக்கு, அந்த மையங்களில் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு 28 ஆயிரத்து 500க்கும் அதிகமான சத்துணவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இடஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுவதாக கூறி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் 35க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் அனைத்தும் விசாரித்த நீதிபதி வினோத் கே.சர்மா, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை என்று கூறிய நீதிபதி, தமிழக அரசின் சத்துணவுப் பணியாளர் நியமனம் செல்லாது என்று தீர்ப்பளித்தார்.
இது தொடர்பான அரசாணையையும், பணியாளர் நியமனங்களையும் ரத்து செய்யவும் உத்தரவிட்டார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் குழு ஒன்றை ஏற்படுத்தி 2 மாத காலத்திற்குள் இந்தப் பதவிகளுக்கு புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் இதே சத்துணவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அப்போது, ஆளும் கட்சியினர் பணம் பெற்றுக் கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்தார்கள். இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டபோது அதனை தள்ளுபடி செய்தது மதுரை உயர் நீதிமன்ற கிளை.
ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் முறைகேடுகளை தடுக்க புதிய விதிமுறைகளை ஏற்படுத்தி சத்துணவு பணியாளர்களை நியமித்தது. அந்த மாவட்ட கலெக்டர்கள் சத்துணவு பணியாளர்களை நியமித்தார்கள். இதில் ஒரு சில முறைகேடுகள் நடந்திருந்தாலும் மற்றபடி தகுதி உள்ளவர்கள் இந்த பணிக்கு நியமிக்கப்பட்டார்.
ஆனால், விதிமுறைகளை தமிழக அரசு சரியாக பின்பற்றவில்லை என்று கூறி சத்துணவு பணியாளர்கள் நியமனம் செல்லாது என்று கூறியுள்ள மதுரை உயர் நீதிமன்ற கிளை, 28,500 குடும்பங்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டது.
இந்த பிரச்சனையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று சத்துணவு பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.