டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயுக்கு கட்டுப்பாட்டு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் முழு அடைப்பு நடந்து வருகிறது. போலீஸ் பாதுகாப்புடன் குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசைக் கண்டித்து தேசிய அளவில் இன்று நடைபெறும் முழுஅடைப்புப் போராட்டத்திற்கு தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சிகளும், பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
திமுக, தேமுதிக, பாரதிய ஜனதா, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் பங்கேற்கின்றன.
சென்னையில் அ.தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களே அரசு பேருந்துகளை இயக்கி வருகின்றன. ஒரு சில பேருந்துகள் மட்டுமே ஓடுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் உரிமையாளர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் காலை நேரத்தில் இரயில் போக்குவரத்தில் எந்த தடையும் ஏற்படவில்லை. இருந்தாலும் அரசியல் கட்சிகள் திடீரென மறியலில் ஈடுபடலாம் என்று தெரிகிறது.
அரியலூரில் 6 சிமெண்ட் தொழிற்சாலைகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதனால் 2 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் தேக்கமடைந்துள்ளன.
திருச்சியில் நாடு தழுவிய போராட்டத்திற்கு பரவலாக ஆதரவு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திருச்சி பெரிய கடை வீதியில் இருக்கும் 2000க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன.
வணிகர் சங்கம், சிறு மற்றும் குறு வர்த்தக சங்கங்கள் இணைந்து நாடு தழுவிய போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் திருச்சியில் காந்தி மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. கடைகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டிருந்தாலும், போக்குவரத்தில் பெரும் அளவில் பாதிப்பு இல்லை.
திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபடப்போவதாக பல்வேறு தரப்பு அறிவித்துள்ளதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் நாடு தழுவிய பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை சிறிதளவு கூட பாதிக்கப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் இயங்குவதாகவும், கடைகள் திறக்கப்பட்டிருப்பதாகவும், பள்ளிகள் ஏற்கனவே அரசு வெளியிட்ட அறிக்கைக்கு ஏற்ப இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் பந்திற்கு முழு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. லாரிகள் இயங்கவில்லை. வணிகர் சங்கங்கள் முழு ஆதரவு அளித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள் மட்டும் பேருந்துகளை இயக்கி வருவதாக கிருஷ்ணகிரி போக்குவரத்து பணிமணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்குகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழகம் - கர்நாடக எல்லையில் இருப்பதால், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் இயங்கவில்லை.
தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கம், தமிழ்நாடு செங்கல் உற்பத்தியாளர் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
தமிழ்நாடு வணிகர் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, ஓட்டல் உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதனால், தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் இன்று திறக்கப்படவில்லை.