Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புலிகளை விட சிறிலங்க அரசு மீது அதிக தவறு: ப.சிதம்பரம்

புலிகளை விட சிறிலங்க அரசு மீது அதிக தவறு: ப.சிதம்பரம்
, வியாழன், 23 ஏப்ரல் 2009 (17:11 IST)
சிவகங்கை: இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவத் தாக்குதல் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்று எண்ணியதால், சிறிலங்க அரசு விடுதலைப் புலிகளை விட அதிக தவறிழைத்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் சிதம்பரம், இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

webdunia photoFILE
இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது மனிதாபிமான ஒன்று என்றும், அங்குள்ள தமிழர்களின் உயிர்களை காப்பாற்றுவது மிகவும் அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

போர் நிறுத்தம் செய்யுமாறு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இந்தியா பல முறை வேண்டுகோள் விடுத்தும் இரு தரப்பும் நமது வேண்டுகோளை ஏற்கவில்லை என்று ப. சிதம்பரம் குறைகூறினார்.

அதே சமயம் இனப்பிரச்சனைக்கு ராணுவம் மூலம்தான் தீர்வு காண முடியும் என்று கருதியதன் மூலம் புலிகளை விட இலங்கை அரசு அதிக தவறிழைத்து விட்டது. இப்பிரச்சனைக்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணமுடியும் என்று அவர் கூறினார்.

இலங்கையில் தமிழர்களுக்கு அந்தஸ்து மற்றும் உரிமை ஆகியவற்றில் சம மரியாதை அளிக்கப்பட வேண்டும். தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஒன்று அல்லது இரண்டு மாகாணங்கள் ஏற்படுத்தப்பட்டு, இலங்கையின் கூட்டாட்சி தத்துவத்திற்கு உட்பட்ட சம அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் சிதம்பரம் யோசனை தெரிவித்தார்.

போர் நிறுத்தம் செய்யவில்லை என்றால் இலங்கையுடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்தியிருப்பது பற்றி கேட்டபோது, இது மிகவும் சீரியசான பிரச்சனை. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இது குறித்து விவாதிக்க முடியாது என்று அவர் பதிலளித்தார்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு தஞ்சம் அளிக்கப்பட வேண்டுமா என்பது, சட்டரீதியான பிரச்சனை என்பதால் இதுகுறித்து தாம் கருத்து கூற முடியாது என்று ப. சிதம்பரம் குறிப்பிட்டார்.

இன்று தமிழகத்தில் நடைபெறும் பொது வேலை நிறுத்தம் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு எதிராக நமது
துயரத்தை வெளிப்படுத்துவதற்கான அடையாளமாகும். அதே சமயம் இது மத்திய அரசுக்கோ அல்லது காங்கிரஸ் கட்சிக்கோ
எதிரானது அல்ல.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறுவது தவறானது. கடந்த 1983ஆம் ஆண்டிலிருந்து மத்தியில் ஆட்சியிலிருந்து வந்த அரசுகள் இலங்கை பிரச்சனையில் என்ன கொள்கையைக் கடைப்பிடித்து வந்ததோ அதே கொள்கையைத்தான் இப்போதைய அரசும் பின்பற்றி வருவதாகவும் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil