இலங்கை தமிழர் பிரச்சனையில் சோனியா காந்தி மவுனம் சாதித்துவருவதற்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலராக பதவி வகித்து வந்த தமிழருவி மணியன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
மதுரையில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் ராஜபக்சே அரசால் தமிழ் இனம் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையிலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது மவுனத்தை கலைக்கவில்லை. எனவே அவருடைய தலைமையிலான கட்சிக்கு தமிழ் மொழியையும் சமுதாயத்தையும் அடகு வைப்பதை எனது இதயம் விரும்பவில்லை'' என்றார்.
தமிழ்நாட்டில் உள்ள 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து செயல்பட்டால், இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் அளிக்க முடியும் என்று தெரிவித்த அவர், தமிழக முதலமைச்சர் கருணாநிதி, இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரவை சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு தலைமை தாங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.