நெல்லையில் கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குனர் சீமானை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, புதுச்சேரி மாவட்ட குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 12ஆம் தேதி புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தனர். இயக்குனர் சீமான், உண்ணாவிரம் இருந்த மாணவர்களை வாழ்த்தி பேசினார். அப்போது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகளை தாக்கி பேசியதாகவும் புதுச்சேரி காவல்துறையினர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருந்த சீமானை கைது செய்யும் நடவடிக்கையில் புதுச்சேரி காவல்துறையினர் செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் புதுச்சேரி காவல்துறையினர் கைது செய்தால், தனக்கு முன்பிணை வழங்க வேண்டுமென்று சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி டி.சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
இந்தநிலையில் சட்டப் பேரவையில், 19ஆம் தேதி காங்கிரஸ், அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் சீமானை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியதற்கு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி விரைவில், கைது செய்துவிடுவோம் என்றார். மேலும் சீமானை கைது செய்வதற்காக 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து இயக்குநர் சீமான், திருநெல்வேலி காவல் ஆணையர் முன் சரண் அடைந்தார். சீமான் சரண் அடைந்தது குறித்து நெல்லை ஆணையர் மஞ்சு நாதா, புதுச்சேரி வழக்கு சம்பந்தமாக சீமானை கைது செய்திருப்பதாகவும் அவரை புதுச்சேரி காவல் துறையிடம் ஒப்படைக்க விருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் சீமானை காவல் வேனில் ஏற்றிக்கொண்டு புதுச்சேரி காவல்துறையினர் புறப்பட்டனர்.
இன்று காலை புதுச்சேரி மாவட்ட குற்றவியல் நீதிபதி முன் சீமான் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சீமானை காவல்துறையினர் புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.