வைகோவை வரலாறு மன்னிக்காது : பொன்முடி
சென்னை , சனி, 21 பிப்ரவரி 2009 (10:14 IST)
மருத்துவமனையில் தங்கி இருக்கும் முதலமைச்சர் கருணாநிதியின் உடல்நலன் பற்றி விசாரிக்க வேண்டுமென்ற பண்பு இல்லாமல் பேசிய 'வைகோவை வரலாறு மன்னிக்காது, மன்னிக்கவே மன்னிக்காது' என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியதை ஆதரித்து வைகோவும் குரல் கொடுத்து இருக்கிறார். 18 ஆண்டு காலம் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவே உன்னை வைத்திருந்தாரே அதற்காக கருணாநிதி ஆட்சியைக் கலைக்க வேண்டுமா?மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியே `தமிழ் ஈழம்' தோன்ற கருணாநிதி மூலம் எடுத்த முயற்சிகளை முறியடிக்கும் வகையில் தன்னை முன்னிலைப்படுத்தி "ஹீரோ''வாக வேண்டும் என்று கள்ளத் தோணியில் சென்று மாபெரும் கிரிமினல் குற்றத்தை நீ செய்தபோது உனக்கு உயிர் பிச்சை கொடுத்தாரே அதற்காகவா?இன்றைய உன் திடீர் `அன்புச் சகோதரி', அன்று உன்னால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு, அதன் விளைவாக வெளியிலேயே வரமுடியாத `பொடா' சட்டத்திலே உன்னை போட்டு வைத்தாரே- அப்பொழுது கோடிக்கணக்கில் கையெழுத்தைப் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பியதோடு, விடுதலைப்புலிகள் மீதிருந்த தடையை நீடித்து நீ வெளியே வர அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி மறுத்த நிலையில், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மூலமாக கருணாநிதி அன்றைய பிரதமர் வாஜ்பாயை சந்திக்கச் செய்து, உன்னை சிறையிலிருந்து வெளிக்கொணர்ந்தாரே, அதற்காகவா ஆட்சியை கலைக்க வேண்டும்?கட்சியே சின்னாபின்னமாகிவிட்டது- 18 மாத சிறை வாசத்தின் போது குரல் கொடுக்க ஆளில்லை- கூண்டே காலியாகிவிட்டது என்றச் சூழ்நிலையில் உன்னோடும் கூட்டு வைத்து உன் கட்சியில் 4 எம்.பி.க்கள் வெற்றி பெற வழி வகுத்தாரே அதற்காகவா? ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக நீ இருந்தபோது உனது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உன்னை வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிழைக்க வைத்த பாவத்திற்காக அவரது ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று சொல்கிறாய்?பொடா சட்டத்திலே உன்னை வேலூர் சிறையிலே அடைத்திருந்த போது பலமுறை வந்து உன்னைப் பார்த்துவிட்டு வந்தாரே- வேலூரில் இருந்து நீதிமன்ற விசாரணைக்காக பூவிருந்தவல்லி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது வேகாத வெயிலில் நீதிமன்றத்தின் வாயிலிலே மணிக்கணக்கிலே காத்திருந்து பார்த்து ஆறுதல் கூறினாரே, அதற்காக அவருடைய ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறாயா?விடுதலைப்புலிகளின் குரல் நான்தான் என்று வாய்கிழிய வீரம் பேசி தம்பட்டம் அடித்துக் கொள்ளும் வைகோவே, "விடுதலைப்புலிகளை அழித்தே ஆகவேண்டும்- இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது தொடர் சம்பவம் தான்-போரில் அப்பாவிகள் கொல்லப்படுவது சகஜம் தான், என்று ராஜபக்சேயின் குரலில் ஜெயலலிதா பேசினாரே; உங்களோடு கூடிக்குலாவும் தா.பாண்டியன் கூட அதற்கு கோபம் வந்து விமர்சித்தாரே- அப்பொழுது எங்கே போனது உன் வீரம்? எங்கே போனது உன் வாய் சவடால்? தமிழர்களுக்கு குரல் கொடுப்பதாக நீலி வேஷம் போடும் ஜெயலலிதாவை சேர்த்துக் கொண்டு நீ ஆடும் நாடகம் நீடிக்காது.உன் அரசியல் வாழ்க்கைக்கே வித்திட்ட தலைவர் கருணாநிதி உடல் நலம் அற்ற நிலையில் ஒரு மாத காலமாக உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மிகப்பெரிய அறுவை சிகிச்சையையும் செய்து கொண்ட பிறகும், அவர் உடல்நலம் விசாரிக்க வேண்டும் என்ற சாதாரண பண்பு கூட இல்லாத உன்னை வரலாறு மன்னிக்காது, மன்னிக்கவே மன்னிக்காது என்று பொன்முடி கூறியுள்ளார்.