சென்னை: இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி திமுக தலைமையிலான இலங்கை தமிழர் நல உரிமை பேரவை சார்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி திமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் நல உரிமை பேரவையின் சார்பில் தமிழகம் முழுவதும் பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும், பொதுக்கூட்டங்களும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது.
அதன்படி நேற்று சென்னையில் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் அன்பழகன், காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
அதன் தொடர்ச்சியாக 2வது நாளாக இன்று இலங்கை தமிழர் நல உரிமை பேரவை சார்பில் சென்னையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
தென்சென்னை திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியில் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழ் மாநில தேசிய லீக், ஜனநாயக முன்னேற்றக் கழகம், புரட்சிபாரதம் ஆகிய கட்சிகள் மற்றும் திராவிடர் கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் பெரும் திரளான அளவில் கலந்து கொண்டனர்.
சென்னை மன்றோ சிலையிலிருந்து தொடங்கிய பேரணி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை நடைபெற்றது.
உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் திமுகவின் முதன்மைச் செயலாளரும், மின்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன்,
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜே.எம்.ஆரூண் எம்பி, திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் மேயருமான சா.கணேசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் எம்பி, தென்சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன், சேப்பாக்கம் பகுதி திமுக செயலாளர் மோகன்பாபு உள்ளிட்ட திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
பேரணியில் பங்கேற்றோர் தத்தம் கட்சிகளின் கொடிகளை ஏந்தி வந்து முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.
"அழிக்காதே, அழிக்காதே தமிழ் இனத்தை அழிக்காதே', "நிறுத்து, நிறுத்து, உடனே போரை நிறுத்து', "தாழாது, தாழாது, தமிழ் இனம் தாழாது, யாரையும் தாழ்த்தாது', "தடுப்போம், தடுப்போம், இனப் படுகொலையை தடுப்போம்' ஆகிய முழக்கங்களை அவர்கள் எழுப்பினார்கள்.