தா.பாண்டியன் கார் எரிப்பு
சென்னை , வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (12:53 IST)
சென்னையில் இன்று அதிகாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை முகப்பேர் டி.வி.எஸ். காலனி 48-வது தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் தா.பாண்டியன் வசித்து வருகிறார். இன்று அதிகாலை 4 மணி அளவில், வழக்கம் போல் அவரது வீட்டிற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த டாடா இண்டிகா காரும், இரு சக்கர வாகனமும் தீ பிடித்து எரிந்தது.இதை பார்த்த அக்கம் பக்கத்தினரும், தா.பாண்டியன் வீட்டில் இருந்தவர்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது பற்றி தா. பாண்டியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் இல்லத்திற்கு விரைந்து வந்தார்.இதனிடையே தீயணைப்பு வாகனம் வருவதற்குள் அப்பகுதி மக்கள் தீயை அணைந்தனர். இந்த விபத்தில் டாடா இண்டிகா காரும், இரு சக்கர வாகனமும் பலத்த சேதம் அடைந்தது.இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.