சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு எடுப்பதற்கான தடையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று நீக்கியது.
சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், அதை நிர்வகிக்க செயல் அதிகாரி நியமிக்கவும் தமிழக அரசு 1987ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கோயிலில் உள்ள பொது தீட்சிதர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அப்பீல் செய்யாமல் நேரடியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தவறு என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதன் பின்னர் பொது தீட்சிதர்கள் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அப்பீல் செய்யப்பட்டது. அரசு பிறப்பித்த உத்தரவு சரியானது என்று அறநிலையத்துறை ஆணையர் தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து 2006ஆம் ஆண்டு பொது தீட்சிதர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு உத்தரவை அமல்படுத்த இடைக்கால தடை விதித்தார்.
இந்த சூழ்நிலையில், சிவனடியார் ஆறுமுகசாமி என்பவர் கோயிலின் கருவறை முன்பு தேவாரம் திருவாசகத்தை பாட முயன்றார். இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அரசு ஏற்று நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தன்னையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று ஆறுமுகசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.பானுமதி முன்னிலையில் நடந்து வந்தது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராசாமி, பல தீட்சிதர்கள் மீது பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயிலை தீட்சிதர்கள் நிர்வகிக்க உரிமையில்லை. அரசுக்கு தான் உரிமை உண்டு என்று வாதாடினார்.
ஆறுமுகசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.காந்தி, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஆர்.பானுமதி தள்ளி வைத்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பானுமதி, கோயிலை நிர்வகிக்கும் உரிமை என்பது மதத்தின் ஒரு பகுதியோ, மத வழக்கமோ அல்ல. கோயில் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. எனவே, இந்த வழக்கில் மதம் தொடர்பான சட்டத்தின் படி பொதுதீட்சிதர்கள் பாதுகாப்பு கோர முடியாது.
கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெற்றால், அந்த கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமிக்க இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. கோயிலில் வரவு செலவு கணக்கு எதையும் பொது தீட்சிதர்கள் வைத்திருக்கவில்லை. கோயிலுக்கு வரவேண்டிய வருவாயும் வசூலிக்கப்படவில்லை. எனவே, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரியானது. அதேபோல், சிவனடியார் ஆறுமுகசாமி கோயிலுக்குள் தேவாரம், திருவாசகத்தை தமிழில் பாடலாம்; அதற்கு பக்தர்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது.
கோயிலுக்கு உள்ள ஏராளமான சொத்துகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை முறையாக நிர்வகிக்கும் என்று நீதிமன்றம் நம்புகிறது. இந்த விடயத்தில் கோயில் செயல் அதிகாரிக்கு பொது தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை ஆணையர் ஒரு வார காலத்துக்குள் கோயில் செயல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.