இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக தொடர் உண்ணாவிரதம் மேற் கொள்ள முயன்ற சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 15 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது நடந்து வரும் தாக்குதலை கண்டித்தும், போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவர்கள், வணிகர்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 15 பேர் இன்று தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். சென்னை பாரிமுனையில் உள்ள சட்டக் கல்லூரி வாசலின் முன்பு பந்தல் அமைத்து அவர்கள் அமர்ந்திருந்தனர்.
தகவலறிந்து காவல்துறையினர் விரைந்து வந்து உண்ணாவிரதம் தொடங்கிய 15 மாணவர்களையும் கைது செய்தனர். அப்போது, மாணவர்கள் இலங்கை அரசை கண்டித்தும், இந்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.