பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு: இல.கணேசன்
சென்னை , திங்கள், 2 பிப்ரவரி 2009 (16:05 IST)
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வரும் 4ஆம் தேதி நடத்தவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு பா.ஜ.க. ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வரும் 4ஆம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ள முழு அடைப்புக்கு பா.ஜ.க. ஆதரவு தருகிறது.தற்போது பத்திரிகைகளில் வரும் செய்திகள், இலங்கையில் தவிக்கும் தமிழர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு நிரந்தரமாக சம உரிமை பெற்றுத்தரவும் ஒவ்வொருவரும் தன் பங்குக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகிறது. சிலர் உணர்ச்சிவசப்பட்டு தங்களை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.செய் அல்லது செத்து மடி என்பது ஏற்புடையதல்ல. மாறாக வாழ்ந்து லட்சியத்தை அடைந்து காட்டு என்பதில் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் பங்குக்கு செய்ய வேண்டியவைகளை செய்தும், மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசின் செயல்பாடு இந்த விடயத்தில் திருப்திகரமாக இல்லை.எனவே மக்கள் அனைவரும் பங்கேற்கும் ஒரு சாத்வீத போராட்டம் நடத்துவதால் மக்களுக்கு தங்களது உணர்வுகளை வெளியிட ஒரு வடிகால் கிடைக்கும். இந்த அறிவிப்பை வெற்றிகரமாக்கிட மக்கள் தானாக முன் வரவேண்டும். தங்களது ஆதரவை ஒன்றுபட்டு மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும். பா.ஜ.க. தொண்டர்கள் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வரும் 4ஆம் தேதி நடத்தவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு ஒத்துழைக்குமாறு இல.கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.