ஒரு அரசே முழு அடைப்பு நடத்தக்கூடாது என்பது தான் உச்ச நீதிமன்றத்தின் வழக்கே தவிர, மக்களின் தனிப்பட்ட எண்ணத்தின் அடிப்படையில் தான் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர்களை ஒட்டு மொத்தமாக அழிக்கும் முயற்சியில் இலங்கை அதிபர் ராஜபக்சே ஈடுபட்டுள்ளார். அதற்காகத்தான் தமிழர்களின் உயிர் மூச்சை அழிக்கின்ற நேரம் இது என்று கூறி வருகிறார். இதற்கு இந்திய அரசும் துணை போகிறது என்று குற்றம்சாற்றினார்.
ஆயுத உதவி, ராணுவ பயிற்சி உதவி ஆகியவற்றை தொடர்ந்து அளித்து வரும் மத்திய அரசு இதுவரை போர் நிறுத்தம் ஏற்பட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்த வைகோ, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வருகிற 4ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்து உள்ளது என்றார்.
முழு அடைப்பு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்கிறது தமிழக அரசு. ஒரு அரசே முழு அடைப்பு நடத்தக்கூடாது என்பது தான் உச்ச நீதிமன்றத்தின் வழக்கே தவிர மக்களின் தனிப்பட்ட எண்ணத்தின் அடிப்படையில் தான் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்று வைகோ தெரிவித்தார்.