இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ள பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் பங்கேற்கும் என்று அச்சங்கத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஈழத்தில் கொன்று குவிக்கப்படும் தமிழர்களின் பாதுகாப்புக்காக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தமிழக அரசியல் இயக்கங்கள், கலைஉலகத்தினர், மாணவர் அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் என அனைவரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.
இருப்பினும், ஈழத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகளில் எவ்வித மாற்றமும் இல்லை. அங்கு, அப்பாவி தமிழர்கள் சொல்லலொண்ணா துயரத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம், பிப்ரவரி 4ஆம் தேதி அன்று பொது வேலைநிறுத்தம் நடத்திடுமாறு தமிழக மக்களிடம் அறைகூவல் விடுத்துள்ளது. 7ஆம் தேதி கருப்புக் கொடி ஊர்வலம் நடத்தவும் முடிவெடுத்துள்ளது. இந்த இயக்கங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் பங்கேற்க முடிவு செய்துள்ளது என்று பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.