இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதலை தடுத்து நிறுத்த கோரி திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 5வது நாளாக இன்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனே தடுத்து நிறுத்தவேண்டும், சிங்கள ராணுவத்துக்கு இந்திய அரசு உதவிகள் செய்யக்கூடாது என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் 27 பேர் கடந்த மாதம் 30ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். சட்டக்கல்லூரி முன்பு பந்தல் அமைத்து அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
உண்ணாவிரதம் இருந்தவர்களில் சதீஷ், சதீஷ்குமார், தமிழரசன் ஆகிய 3 மாணவர்கள் நேற்று முன்தினம் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மேலும் 12 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் உண்ணாவிரத பந்தலிலேயே சோர்ந்து போய் படுத்து கிடந்தனர். இது பற்றிய தகவலை காவல்துறையினர் அரசு மருத்துவர்களுக்கு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினர் உண்ணாவிரத பந்தலுக்கு வந்து 12 மாணவர்களின் உடல்நிலையையும் பரிசோதித்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதையொட்டி சட்டக்கல்லூரி முதல்வர் இசைமதி, திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் சின்னச்சாமி ஆகியோர் உண்ணாவிரதத்தை கைவிடும்படி மாணவர்களிடம் கேட்டனர். ஆனால் மாணவர்களோ ''நாங்கள் உயிரை விட்டாலும் இங்கேயே தான் விடுவோமே தவிர உண்ணாவிரதத்தை கைவிடமாட்டோம்'' என்று திட்டவட்டமாக கூறி விட்டனர்.
உடல் நிலை கருதி மயக்கம் அடைந்த மாணவர்களாவது சிகிச்சைக்கு செல்லும்படி கேட்டும் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் காவல்துறையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாணவர்கள் தாங்கள் கொண்ட கொள்கையில் பிடிவாதமாக இருந்ததால் காவல்துறையினரும் அவர்களுடன் பேசுவதை கைவிட்டு சென்றனர்.
இன்றும் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. பல மாணவர்கள் மிகவும் சோர்வாகவே காணப்பட்டனர்.