இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிப்ரவரி 4ஆம் தேதி நடக்கும் பொது வேலை நிறுத்தம் அர்த்தாலை குறிக்குமே தவிர அது பந்த் அல்ல என்று தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், அதற்கு நிரந்தரமாக போர் நிறுத்தம் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவும் பிப்ரவரி 4ஆம் தேதி பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ளும்படி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்திருக்கிறது. ஆனால், பொது வேலைநிறுத்தம், முழு அடைப்பு என்று கருதிக்கொண்டு தமிழக அரசு, அது சட்டப்படி உச்ச நீதிமன்றத்துக்கு ஆணைக்கு எதிரானது என்று பிரகடனம் செய்திருக்கிறது.
தமிழக அரசு சுட்டிக்காட்டியிருக்கும் உச்ச நீதிமன்றம் பந்த் என்பதற்கும் 'அர்த்தால்' என்பதற்கும் வேறுபாடு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு குறித்து கேரள உயர் நீதிமன்றம் கூறியிருந்த கருத்தை உச்ச நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது.
'அர்த்தால்' என்பது அறவழியில் எதிர்ப்பை தெரிவிக்கும் போராட்ட வடிவம் என்றும் அதற்கான அழைப்பில் கட்டாயம் எதுவுமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'பந்த்' என்பது உடல்வலுவை காட்டி கட்டாயப்படுத்தும் நடவடிக்கை என்றும் அது குடிமக்களின் சுதந்திரத்தில் தலையிடுகிறது என்றும் வேறுபடுத்தி காட்டியிருக்கிறது.
பிப்ரவரி 4ஆம் தேதி நடத்த வேண்டும் என்று விடுக்கப்பட்டுள்ள அழைப்பு அர்த்தாலை குறிக்கும். அது பந்த் அல்ல. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களும் மலேசியா, இலங்கை போன்ற நாடுகளிலும் `அர்த்தால்' என்பது பொதுவான, கட்டாயம் இல்லாத வேலைநிறுத்தத்திற்கான அழைப்பு என்று வகையிலேயே கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவின் வடமாநிலங்களில் உண்ணாவிரதம் இருப்பதுகூட 'அர்த்தால்' என்றுதான் அழைக்கப்படுகிறது.
எனவே, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ள பொது வேலைநிறுத்தம் என்பது 'அர்த்தால்' ஆகும். இதில் எந்த கட்டாயமும் இல்லை. உடல்வலுவைக் காட்டி கட்டாயப்படுத்தும் நடவடிக்கை எதுவும் இதில் இருக்காது. இது அமைதியாக நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுவான வேலைநிறுத்தம்தான், அதாவது, 'அர்த்தால்'தான். இதில் வன்முறைக்கு சிறிதும் இடம் இருக்காது.
சில மாதங்களுக்கு முன்பு சேது கால்வாய் திட்டத்திற்காக முதலமைச்சர் தலைமையில் கூடி அனைத்துக் கட்சிகள் முதலில் முடிவெடுத்து அறிவித்தது பந்த். அதனால்தான் உச்ச நீதிமன்றம் அது சட்ட விரோதம் என்றது. இலங்கையில் நடப்பது தமிழின படுகொலை அநீதியானது என்று தமிழகத்தில் எல்லோரும் ஒப்புக்கொள்கிறோம். அதற்கு காரணமான போர் நிறுத்தப்பட வேண்டும். இதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அனைவருமே வலியுறுத்துகிறோம்.
தமிழர்களுக்கு எல்லாம் பிரதிநிதித்துவம் வகிக்கும் சட்டப் பேரவையிலும் இறுதி வேண்டுகோள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். ஆனாலும், நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படவில்லை. நாம் விரும்புகிற அமைதிப் பேச்சும் தொடங்கப்படவில்லை. அப்படியானால், நமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு வேறு என்ன வழிமுறை இருக்கிறது?
அமைதியான, எந்தவித கட்டாயமும் இல்லாத, உடல்வலுவை காட்டி அச்சுறுத்தாத வழிமுறையாக பொதுவான வேலைநிறுத்தம், அதாவது, 'அர்த்தால்' நடத்துவதற்கு அழைப்பு விடுக்கிறோம். இதில் சட்ட மீறல் இல்லை, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்ற நிலையும் இல்லை. எனவே, அன்றைய தினத்தில் 'அர்த்தால்', அதாவது, பொது வேலைநிறுத்தம் நடப்பதற்கு அனைத்து தரப்பினரும் அவர்களாக முன்வந்து ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழக மக்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.