Publish Date: Sun, 01 Feb 2009 (17:40 IST)
Updated Date: Sun, 01 Feb 2009 (17:40 IST)
இலங்கையில் நடக்கும் போரை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் பிப்ரவரி 4ஆம் தேதி அறிவித்துள்ள பொது வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்,
"இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு அப்பாவித் தமிழர்களின் உயிர்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 4ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் மேற்கொள்ளும்படி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்திருப்பது சட்டவிரோதமானது என தமிழக அரசு பிரச்சாரம் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உச்ச நீதிமன்றம் 'பந்த்' செய்வதற்கு எதிராகக் கூறியுள்ள கருத்தினை திரித்துக் கூறி மக்களை மிரட்டுவதற்குத் தமிழக அரசு முயற்சிக்கிறது.
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்குப் பிறகுதான் மேற்கு வங்காளத்திலும், கேரளத்திலும் சுய வேலை மறுப்புப் போராட்டமும், கடையடைப்புப் போராட்டமும் நடந்துள்ளன என்பதைத் தமிழக அரசின் கவனத்திற்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், மாணவர்கள், திரைப்படத்துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தமிழர்களும் பிப்ரவரி 4ஆம் தேதி தாங்களே சுய வேலை மறுப்பு செய்து தங்கள் இல்லங்களிலே இருக்குமாறு மிக்கப் பணிவுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். பொது வேலை நிறுத்தத்தை முறியடிக்கத் தமிழக அரசு தவறான பிரச்சாரத்திலும் மிரட்டல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருப்பது அப்பட்டமான ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் செயலாகும்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அனைத்துத் தமிழர்களும் பொது வேலை நிறுத்தம் வெற்றிபெற துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
போராட்டங்களின்போது எந்த இடத்திலும் சிறு அளவு வன்முறை ஏற்படாமலும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் இல்லாமலும் அமைதியான முறையில் வேலை நிறுத்தத்தை நடத்துமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
பொது வேலை நிறுத்தம், கறுப்புக் கொடி ஊர்வலம் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்துவது குறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் மாவட்டப் பொறுப்பாளர்கள் அவசரமாகக் கூடித் திட்டங்களை வகித்துச் செயல்படுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.