தமிழ்நாடு முழுவதும் அரசு, தனியார் கல்லூரிகளையும் அதனோடு இணைந்த விடுதிகளையும் மறு உத்தரவு வரும் வரையில் மூடும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அங்கு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அரசு, தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கடந்த சில நாட்களாக வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சேலம், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட பல ஊர்களில் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் பல இடங்களில் கண்டன ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், அனைத்துக் கல்லூரிகளையும் அதனோடு இணைந்த விடுதிகளையும் உடனடியாக மூடும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதி விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "மாணவர்களிடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும், மாணவர் விடுதிகளும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டு இருக்கும்'' என்று கூறப்பட்டுள்ளது.