மதுரையில் சோனியா காந்தியின் உருவப்படத்தை எரித்த தமிழ் இன துரோகிகளை காவல்துறை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மதுரையில் சில வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் திடீரென்று அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் திருவுருவப் படத்தை தீ வைத்து எரித்ததாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.
இலங்கைத் தமிழர் வாழ்க்கையில் ஏதாவது முன்னேற்றம் அல்லது அதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால், சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் நடைபெற்று வரும் மத்திய காங்கிரஸ் அரசால் தான் முடியும். அதற்கான பல்வேறு முயற்சிகளை இதுவரை தொடர்ந்து இலங்கைத் தமிழர்களின் துயர் துடைக்க மத்திய அரசு எடுத்த வண்ணமே இருக்கிறது.
அங்குள்ள தமிழர்கள் வாழ்வுரிமை பெற, ஆட்சியில் உரிய பங்கு பெற தலைவர் ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனே ஒப்பந்தம் அற்புதமாய் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தம் நிறைவேறாமல் செய்தவர்கள் விடுதலைப்புலிகள் தான். அதைத் தொடர்ந்து இன்றைக்கு இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் அல்லல்படும் வகையில் நடைபெற்று வரும் போருக்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் ஒரு பக்கம் விடுதலைப்புலிகள் மறுபக்கம் இலங்கை அரசு என்பதை அனைவரும் அறிவர்.
தமிழக முதலமைச்சர் கருணாநிதியுடன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் நானும் விடுத்த வேண்டுகோளை ஏற்று நேற்றைக்கு இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சேயை சந்தித்து இலங்கை அப்பாவி தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள இந்நேரத்தில் தமிழ் இனத் துரோகிகள் சிலர் சோனியா காந்தியின் உருவப்படத்தை எரித்துள்ள செயலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிலையில், தமிழ் இனத்தை காப்போம் என்று கூக்குரல் இடுபவர்கள் சோனியா காந்திக்கு விரோதிகளாகவும் தமிழகத்தில் செயல்படுவது காட்டுமிராண்டித்தனம். சோனியா காந்தி உருவப் படத்தை எரித்ததின் மூலம் அவர்கள் எதையும் சாதிக்கப்போவதில்லை. மாறாக பெரும்பான்மையான தமிழர்களின் எதிர்ப்பையும், வெறுப்பையும் தான் பெறுவார்கள். இந்த தமிழ் இன துரோகிகளை காவல்துறை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தங்கபாலு வலியுறுத்தியுள்ளார்.