தமிழர் நலனுக்காக வாழ்ந்து போராட வேண்டிய வாலிபர்கள், இப்படித் தங்களையே அழித்து கொள்ளும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று ம.தி.மு.க. பொதுசெயலர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்துக்குமார் என்னும் வீரத் தமிழ் இளைஞன், ஈழத் தமிழர்களின் துயரத்தை தாங்கிக் கொள்ள முடியாமல், தன்னையே நெருப்புக்கு தாரை வார்த்தான் எனும் செய்தி நம் இதயத்தை சுட்டு எரிக்கிறது. முத்துக்குமாரை இழந்து துன்பத்தில் துடிதுடிக்கும் அவரது பெற்றோருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியை தெரிவிக்கிறேன்.
ஈழத் தமிழரின் தியாக வரலாற்றில், முத்துக்குமாரின் தியாகமும், புகழும் நிலைத்து நிற்கும். தாய்த் தமிழகத்தின் இளந்தமிழ் மனங்கள் எரிமலையாக சீறத் தொடங்கிவிட்டதை இப்போதாவது தமிழருக்கு துரோகம் செய்யும் மத்திய அரசு உணரட்டும்.
சிங்கள அரசு நடத்தும் இனக்கொலை போரை தடுக்க முன்வரட்டும். செய்துவரும் துரோகத்தை இனியாவது நிறுத்தட்டும். தமிழர் நலனுக்காக வாழ்ந்து போராட வேண்டிய வாலிபர்கள், இப்படித் தங்களையே அழித்து கொள்ளும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என மன்றாடி கேட்டுக் கொள்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.