இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தக்கோரியும், போர் நிறுத்தம் செய்யக்கோரியும், செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த 7 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று விலக்கிக் கொண்டனர். மாணவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
சட்டக்கல்லூரி மாணவர்களான ஜம்புகுமார், திருமுருகன், விஜயகுமார், முஜிபுர்ரகுமான், நவீன், சுரேஷ், ராஜா, ஆறுமுக நயினார், முனிஷ்குமார், மணிவேல், பிரபு என்ற அன்பு, பிரவீன், ராஜ் குமார், துரியன் ஆகியோர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர்.
இதில் மாணவர்கள் ஜம்புகுமார், திருமுருகன், துரியன், ஆறுமுக நயினார், நவீன், முனிஷ்குமார் ஆகியோர் மயக்கம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
நேற்று 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த 8 மாணவர்களின் நாடித்துடிப்பு குறைந்து வருவதாக மருத்துவர்கள் கூறியதன் பேரில், உண்ணாவிரத பந்தலுக்கு சென்ற காவல்துறையினர், மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையிலும் மாணவர்கள், உண்ணாவிரதத்தை நிறுத்தவில்லை. இந்த நிலையில் மருத்துவமனைக்கு நேற்று மாலை சென்ற விடுதலை சிறுத்தை அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன், மாணவர்களுடன் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொள்ள மாணவர்கள் சம்மதித்தனர்.
அதன் பின் மாணவர்களுக்கு பழச்சாறு கொடுத்து, உண்ணாவிரதத்தை, திருமாவளவன் முடித்து வைத்தார். அப்போது பா.ஜ.க மாநில துணை தலைவர் குமரவேல், கவிஞர் காசி ஆனந்தன், பேராசிரியர் சுப.வீர பாண்டியன், இயக்குனர் புகழேந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன், பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணம் எதிர்பார்த்தது போல் இல்லை. இலங்கை தமிழர்களுக்காக, தமிழகம் முழுவதும் மாணவர் சமுதாயம் அறப்போரில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 14 மாணவர்களையும், சட்டக்கல்லூரி நிர்வாகம் 15 நாள் இடை நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.