இலங்கை அதிபர் ராஜபக்சேயின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் கருணாநிதி இலங்கை செல்ல வேண்டும் என்றும், அவர் சொன்னால்தான் விடுதலைப் புலிகள் கேட்பார்கள் என்றும் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார்.
அ.இ.அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இலங்கை வர வேண்டும் என்றும், பிடித்து வைத்துள்ள தமிழர்களை விடுவிக்கும்படி விடுதலைப் புலிகளை கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் ராஜபக்சே கூறியிருப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், எனக்கு அவர் விடுத்த அழைப்புக்கு நன்றி. நான் போவதால் எந்த நன்மையும் ஏற்படாது. விடுதலைப் புலிகள் நான் சொல்வதை கேட்க மாட்டார்கள் என்றார்.
மேலும் இலங்கையில் அமைதியும், போர் நிறுத்தமும் ஏற்பட வேண்டும் என்பதே இப்போது முக்கியமானதாகும். இதற்காக கருணாநிதி இலங்கை போக வேண்டும். அவர் சொன்னால் விடுதலைப்புலிகள் கேட்பார்கள். ஆகவே அவரை அழைத்துச் சென்று விடுதலைப் புலிகளை ஆயுதத்தை ஒப்படைக்கும்படி கூறலாம் என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.