தமிழினத்தை அழித்துவிட முயலும் சிங்கள இனவெறி அரசின் பயங்கரவாத முகத்தையும், அதற்குத் துணைபோய்க் கொண்டிருப்பவர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களைப் பொறுத்தவரை பிரணாப்பின் கொழும்பு பயணம் ஏமாற்றமாகவே முடிந்துள்ளது. ஏனெனில் இலங்கையில் தமிழினப் படுகொலைக்குக் காரணமான போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திக் கூறிவருவதற்கும், பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
ஒட்டுமொத்தத் தமிழர்கள் எதிர்பார்த்துக் காத்து நிற்கிற, தமிழகம் வலியுறுத்தி வருகிற போர் நிறுத்தம் பற்றி இலங்கை அதிபரிடம் அயலுறவுத்துறை அமைச்சர் பேசவே இல்லை என்பதை இந்தியத் தூதரகத்தின் அறிவிப்பு தெளிவுப்படுத்தியிருக்கிறது. போரை நிறுத்த மாட்டோம், வேண்டுமானால் போர் முனையில் சிக்கியுள்ள லட்சக்கணக்கான தமிழர்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லுகிறோம் என்று இனவெறி பிடித்த ராஜபக்சே சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு வருவதற்கு இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் கொழும்புவுக்கு நேரில் சென்று வர தேவையில்லை.
இன்றே போர் நிறுத்தம். நாளை பேச்சு வார்த்தை, அடுத்து அமைதியான வாழ்வு, அதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று இறுதி வேண்டுகோள் விடுத்த தமிழக சட்டப்பேரவைக்கும் அதைத் தேர்ந்தெடுத்த தமிழர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய அவமானம் இது.
தமிழினத்தை அழித்துவிட முயலும் சிங்கள இனவெறி அரசின் பயங்கரவாத முகத்தையும், அதற்குத் துணைபோய்க் கொண்டிருப்பவர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது. தன்மானம் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். இன்றே முடிவெடுத்துக் செயல்படுவோம்., தமிழனத்தைக் காப்போம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.