இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், சிங்கள அரசுக்கு ராணுவ உதவிகளை செய்து வரும் மத்திய அரசை கண்டித்தும் ம.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுசெயலர் வைகோ தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்பி ஒரு கபட நாடகத்தை செய்திருக்கிறது மத்திய அரசு என்று குற்றம்சாற்றினார்.
சில நாட்களுக்கு முன்பாகவே திட்டமிட்டு சர்வதேச தொண்டு நிறுவனங்களை அச்சுறுத்தி வெளியே அனுப்பி விட்ட சிங்கள ராணுவம், இப்போது குண்டு வீசி அப்பாவி மக்களை கொல்கிறது என்று தெரிவித்தார்.
தமிழக தலைவர்கள், முன்னாள் முதலமைச்சர், இந்நாள் முதலமைச்சர் வந்து பார்க்கட்டும் என்று சொல்லும் இந்த கொலைகார ராஜபக்சேயின் ஆணவத்துக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது என்று பேசிய வைகோ, முதலில் ராஜபக்சே போரை நிறுத்தட்டும் என்றார்.
இதேபோல் தமிழகம் முழுவதும் ம.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
புதுச்சேரியில் ம.தி.மு.க. சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய- மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.