வரும் திங்கட்கிழமையன்று குடியரசு தின கொண்டாட்டங்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த மாநில காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) கே.பி. ஜெயின், குறிப்பாக எந்த அமைப்புகளிடம் இருந்தும் எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என்றாலும், மாநிலம் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்.
குடியரசு தின கொண்டாட்டங்கள் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநில குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்துறையை (சிபிசிஐடி) பொருத்தவரை மிகப்பெரிய சாதனைகளைப் புரிந்துள்ளதாகவும், நீண்ட காலம் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடித்து வருவதாகவும் ஜெயின் கூறினார்.
தங்க காசு மோசடி வழக்கைப் பொருத்தவரை விசாரணையின் போது ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்ட காவல்துறை ஆய்வாளர் சுந்தரேச பாண்டியனும், தலைமைக்காவலர் ஒருவரும் பணியிட மாறுதல் செய்யப்பட்டு பின்னர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறினார்.
தங்கக்காசு மோசடி வழக்கில் அவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் தேசிய பாதுகாப்பு மையம் (National Defence Academy) அமைப்பது குறித்து மத்தியக் குழு பார்வையிட்டு இடத்தை தேர்வு செய்யும் என்றும் ஜெயின் கூறினார்.