சென்னை : தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரியும். 'கள்' இறக்கும் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக காங்கிரஸ் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமை தாங்கினார். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் உண்ணா விரதத்தை துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, தமிழகத்தில் விவசாயிகள் சங்கம் 'கள்' இறக்கும் போராட்டம் அறிவித்திருப்பது தாய்மார்களையும், இளைஞர்களையும் பாதிக்கக்கூடிய விஷயமாகும். மது பழக்கம் தமிழகத்தை சீரழித்து விடும். தமிழக வரலாற்றில் மீண்டும் ஒரு கறைபடிந்த சம்பவத்தை உருவாக்கும் என்றார்.
மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார் ஆகியோர் போராடி தங்களது வாழ்நாளில் மதுவிலக்கை கொண்டு வந்து மக்கள் நலனுக்காக வரலாறு படைத்தார்கள் என்று தெரிவித்த தங்கபாலு, 'கள்' என்பது மனிதனை மயக்கும். சிலர் அதனை உணவுப்பொருள் என தவறான செய்தியை தமிழக மக்களிடையே பரப்புகிறார்கள் என்றார்.
தமிழகத்தில் முழுமையாக மது விலக்கு கொள்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதை காங்கிரஸ் எப்போதும் ஆதரிக்கும் என்ற கூறிய அவர், "கள்' இறக்கும் போராட்டத்தை விவசாயிகள் சங்கம் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் எம்.பி. கலியபெருமாள், மூத்த தலைவர் குமரி அனந்தன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் தாமோதரன், முன்னாள் துணை மேயர் கராத்தே ஆர்.தியாகராஜன், கோவை செல்வராஜ், மாவட்டத் தலைவர்கள் ராயபுரம் மனோ, கோவிந்தசாமி, மங்கள்ராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.