Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனவ‌ரி 26ஆ‌ம் தே‌தி வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கம் : கருணாநிதி வழங்குகிறார்

Advertiesment
ஜனவ‌ரி 26ஆ‌ம் தே‌தி வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கம் : கருணாநிதி வழங்குகிறார்
வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான அண்ணா பதக்க‌த்தை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி குடியரசு ‌தின‌விழா‌வி‌ல் வழ‌ங்‌கு‌கிறா‌ர் எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

சென்னை காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகே குடியரசு தினவிழா வருகிற 26ஆ‌ம் தேதி (திங்கட் கிழமை) காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தரவிருக்கும் தமிழக ஆளுந‌ர் பர்னாலாவை, முதலமைச்சர் கருணாநிதி, காந்தி சிலை அருகே வரவேற்‌கிறா‌ர். அதன் பிறகு முப்படைத் தலைவர்களையும், கமாண்டர் இந்தியக் கடலோரக் காவல்படை (கிழக்கு மண்டலம்), காவல்துறை இயக்குநர், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு), மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோரை ஆளுநருக்கு, முதலமைச்சர் அறிமுகம் செய்து வை‌க்‌கிறா‌ர். அதன் பிறகு தேசிய கொடியை ஆளுந‌ர் ஏற்றி வைத்து அணி வகுப்பு மரியாதையை ஏற்று‌க் கொ‌‌ள்‌கிறா‌ர்.

ராணுவப்படை, கடற்படை, முன்னாள் ராணுவத்தினர், மத்திய சேமக்காவல் படை, ரயில்வே பாதுகாப்பு படை, மத்திய தொழிற் பாதுகாப்புபடை, சென்னை மாநகராட்சி காவல்துறை, சென்னை மாநகரக் காவல் மோப்ப நாய்ப் பிரிவு, சென்னை மாநகர காவல் குதிரைப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள், தமிழ்நாடு சிறப்பு கடற்கரைப் பாதுகாப்பு பிரிவு, தமிழ்நாடு காவல் மண்டலம், நீலகிரி காவலர் பிரிவு, ஊர்க்காவல் படை, தீயணைப்பு படை, தேசிய மாணவர் படைப் பிரிவுகள், சாலைக்காப்பு ுற்றுக் காவல்படையினர் ஆகியோரின் அணி வகுப்பு நடைபெறு‌கிறது.

இதனைத் தொடர்ந்து 4 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள், 3 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், கிராமியக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறு‌கிறது. பிறகு பல்வேறு அரசு துறைகள் சார்பில் அலங்கார வண்டிகள் அணிவகுத்துச் செல்லும். அணிவகுப்புகள் அகில இந்திய வானொலி நிலையம் அருகேயுள்ள புறவழிச் சாலையிலிருந்து புறப்பட்டு மெல்ல காமரஜர் சாலையில் வந்து, சென்னைப் பல்கலைக்கழக வளாகம் அருகே நிறைவு பெறு‌கிறது.

முதலமைச்சர் கருணாநிதி வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான அண்ணா பதக்கம், வீரதீர செயலைப் பாராட்டி மத்திய அரசு வழங்கும் ஜீவன் ர‌க் ஷா பதக்கம், மத நல்லிணத்துக்கான கோட்டை அமீர் விருது, கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டதற்கான காந்தியடிகள் காவலர் பதக்கம் ஆகிய விருதுகளை வழங்குகிறார்.

பொதுமக்கள் காமரஜர் சாலையின் இருபுறமும் நின்று அணிவகுப்பையும் அலங்கார வண்டிகளையும் பார்க்க தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத் தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் 26ஆ‌ம் தேதி அன்று தேசியக் கொடி ஏற்றி காவல்துறை அணிவகுப்புகளுடன் குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்பார்கள். மாநகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி மன்றங்கள் மற்றும் பேரூராட்சி மன்ற அலுவலகங்களிலும் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி நடைபெறு‌கிறது எ‌ன்று த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil